சிற்பம்
நடுகல் வீரன்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பெண்ணேசுவர மடம் |
ஊர் | பெண்ணேசுவர மடம் |
வட்டம் | பையூர் பற்று |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | நடுகல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
அரசனின் வெற்றி வேண்டி போரில் ஈடுபட்டு இறந்த வீரன்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நடுகற்கள் என்பது சங்ககாலந்தொட்டு மாடுபிடிச் சண்டையில் மாய்ந்த வீரர் இளையர் ஆகியோருக்காக எடுக்கப் பெற்ற வீரக்கற்களாகும். இந்த நடுகற்கள் பழங்குடி மக்களின் குலத்தெய்வமாக வழிபடப்பட்டன. நடுகல் தெய்வம் உருவானது கால்நடை வளர்ப்புப் பழங்குடிச் சமூகத்தில் ஆகும். மேலும் நடுகல் பழங்குடி வாழ்க்கையில் முகிழ்த்த ஆவி வழிபாட்டின் எச்சம் ஆகும். நடுகற்கள் நடப்படும் இடம்பற்றி இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளன. இலக்கியத்தில் நடுகல் இருப்பிடத்தைக் குறிப்பிடும்போது ஆற்றங்கரை, பெருவழி, சந்தி, பாலைநிலம், ஊர்ப்புறம், மலையடிவாரம் ஆகியவற்றைச் சுட்டுகின்றது. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்திற்காகவும், ஆநிரைக்காவும் பூசல் நடைபெற்றது. பண்டையகாலத்தில் கால்நடைகளே செல்வம் எனப்பெற்றதால் ஆகோள் பூசல் தமிழர்களின் வாழ்வில் அன்றாட நிகழ்வாக பண்டு இருந்தது. தொல்காப்பியமும் ஆநிரை கவர்தலுக்கு வெட்சித் திணை என்றும், ஆநிரை மீட்டலை கரந்தைத் திணை என்றும் இலக்கணம் வகுத்தது. நிரை கவர்தல், மீட்டல் ஆகியவை முல்லை, பாலைப்பகுதிகளில் அன்றாட நிகழ்ச்சியாக விளங்கின. வீரர்கள் இரவு நேரத்தில் சென்று ஆநிரைகளைக் கவர்ந்தனர் என்று கூறப்படுகின்றது. சங்ககாலத்தில் நிரை மீட்ட வீரர்களுக்கே நடுகல் வைக்கப்பட்டுள்ளது. நிரைமீட்ட வீரர்களைக் கரந்தையர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். நிரை மீட்டவர்களைக் குறிக்க மறவர், ஆடவர், தறுகண் ஆளர் போன்ற சொற்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அகநானூற்றில் 11 பாட்டுகள் நடுகற்களைப் பற்றிப் பேசியுள்ளன. அந்த நடுகற்கள் எல்லாம் கரந்தை வீரர்களுக்கு எடுக்கப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல்களில் மழவர்கள் நிரை கவர்ந்தபோது அந்தப் பூசலில் கொல்லப்பட்ட மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தி கூறப்பெறுகின்றது. பெண்ணேசுவர மடத்தில் உள்ள இச்சிற்பத்தில் வீரன் நீண்ட வாளை கையில் உயர்த்திப் பிடித்துள்ளான். இடது கையில் குறுவாளைப் பிடித்துள்ளான். ஒரே சமயத்தில் இரு கருவிகளை கையாளுவதில் வல்லவனாக இவ்வீரன் உள்ளான். மேலும் இடையில் ஒரு கத்தி உறையுடன் செருகப்பட்டுள்ளது. வீரன் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளான். தலையில் பெரிய கொண்டை குந்தளம் தலையலங்காரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் கண்டிகை, சரப்பளி, நீண்ட ஆரம் அணிந்துள்ளான். முன் வளைகள், கடக வளை (கேயூரம்), தோள்களில் தோள் மாலை ஆகியன கைகளுக்கு அழகு சேர்க்கின்றன. முகப்புடன் கூடிய அரைப்பட்டிகையும், தாரகைச் சும்மையும் இடையிலும், தொடை வரையிலான அரையாடையும் அணிந்துள்ள இவ்வீரன் இளையனாக உள்ளான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நடுகல் வீரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |