சிற்பம்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் வீரன்
சிற்பத்தின்அமைவிடம் எடுத்தனூர் வேடியப்பன் கோயில்
ஊர் எடுத்தனூர்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் ஏரிக்கரை
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்
விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் எடுத்தனூர் என்னும் ஊரில் உள்ள முதலாம் மகேந்திரவர்மனின் 34-வது ஆட்சியாண்டைச் சேர்ந்த நடுகல் இதுவாகும். இந்நடுகல் கி.பி.624-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. “கோவிசைய மயீந்திர பருமற்கு யாண்டு முப்பத்து நான்காவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமை புறத்தே வாடிப் பட்டான் கல்“ என்ற வட்டெழுத்து கல்வெட்டுச் செய்தி இந்நடுகல்லில் காணப்படுகிறது. நடுகல் வீரன் இடதுபுறம் பார்த்த நிலையில் இயங்கு நிலையில் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தி புடைப்புச் சிற்பமாக காணப்படுகிறான். வீரனது காலருகே நாயின் உருவம் புடைக்கப்பட்டுள்ளது. தலைவன் கருந்தேவக்கத்தி ஆகோள் பூசலில் கள்வர்களோடு போராடிய போது அவனது நாயும் ஒரு கள்வனை கடித்து தாக்கிய பொழுதில் உயிர்நீத்தது. அந்த எருமை நிரைகளைக் கவர வந்திருந்த கள்ளருள் இருவரைக் கருந்தேவகத்தியின் கோபாலன் எனும் பெயருடைய நாய் கடித்துத் துரத்தி எருமை நிரையைக் காத்து நின்றது என்பதனை நடுகல் குறிப்பு தருகின்றது. இதன் மூலம் வீரமுடன் போரிட்ட வீட்டு வளர்ப்பு விலங்கான நாய்க்கும் நடுகல் எடுப்பித்த “ஓர் நிறை“ என்ற தமிழ்ச்சமூகப் பண்பாடு தெற்றென விளங்குகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.அருண்குமார் பங்கஜ்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஆகோள் பூசலில் உயிர்நீத்த வீர்னின் செயற்கரிய செயலை போற்றும் விதமாக, அவ்வீரன் நினைவாக நடுகல் எடுக்கப்பட்டது. நடுகல்லில் அவ்வீரனின் பீடும் பெயரும் கல்வெட்டாக எழுதப் பெற்றிருக்கும். இத்தகு நடுகற்கள் எடுக்கப்பட்டமையை சங்க இலக்கியங்களும் பகர்கின்றன. தொண்டை மண்டலத்தில் செங்கம்-திருவண்ணாமலை பகுதிகளில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த பல நடுகற்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான எடுத்தனூர் நடுகல், வளர்ப்பு விலங்கான, வீரனுடன் தானும் கள்வனை கடித்து இறந்துபட்ட நாய்க்கும் நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியை சான்றாக காட்டி நிற்கிறது.
குறிப்புதவிகள்
நடுகல் வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்