
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | நல்லுத்தேவன்பட்டி மலை அடிவாரம் |
ஊர் | நல்லுதேவன்பட்டி |
வட்டம் | உசிலம்பட்டி |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | நல்லுத்தேவன்பட்டி மொட்டைமலை |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 16-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மொட்டைமலை அடிவாரப் பகுதியில் 8 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட புலிக்குத்தி நடுகல்லும், அதனருகே மற்றொரு குதிரை வீரன் நடுகல் சிற்பமும் உள்ளது. முதல் சிற்பத்தில், இரண்டு காட்சிகள் ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. ஊர் நலனுக்காக புலியுடன் போராடும் வீரன் கீழ் அடுக்கிலும், புலியைக் கொன்று தானும் இறந்த பின், குதிரை மீதேறி வானுலகம் செல்லும் காட்சி மேல் அடுக்கிலும் காட்டப்பட்டுள்ளது. குதிரை மீது பயணிக்கும் வீரனுக்கு ஒருவர் குடை பிடித்தவாறு உள்ளார். ஆக்ரோசமாக முன்னங்கால் இரண்டையும் தூக்கியபடி தாக்க வரும் புலியினை, வலது காலினை ஊண்டி இடது காலை மண்டியிட்டு வலது கையில் உள்ள ஆயுத்தால் புலியின் வாய்ப் பகுதியில் குத்திய நிலையில் காட்டப்பட்டுள்ளது. இச்சண்டையின் போது இருவருமே இறந்து இருக்கக்கூடும். பொதுவாக இது போன்ற புலிகுத்தி நடுகல்லில், வீரன் சண்டையிடும் காட்சி மட்டுமே காட்சிப்படுத்தப்படும். இங்கே அரிதாக, சண்டைக்காட்சியும் அதன் பின்னர் இறந்தபின் வானுலகம் செல்லும் காட்சியும் ஒருங்கே ஒரே கல்லில் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நடுகல்லுக்கு அருகே மற்றொரு நடுகல் ஒன்றும் காணப்படுகின்றது. இந்நடுகல் சுமார் 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் குதிரையில் பயணிப்பது போலவும், அவனுக்கு ஒருவன் குடை பிடிப்பதும் போல காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவங்களுக்கு கீழே இரண்டு பெண் உருவங்கள் காணப்படுகின்றது. இந்த இரண்டு நடுகற்களும் தோற்றத்தின் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். பொதுவாக இது போன்ற நடுகற்களை உருவாக்கும் போது, சிற்பிகள் அருகாமையில் உள்ள மலை அடிவாரப் பகுதிகளுக்குச் சென்று, தேவையான அளவுக்கேற்ப பாறைக் கற்களைத் தேர்வு செய்வர். அவ்வாறே இந்நடுகற்களுக்கான மூலக்கல் இம்மலை அடிவாரத்தில் தேர்வு செய்யப்பட்டு, அதே இடத்திலேயே செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிற்பங்கள் முழுமையான பிறகு ஏதோ காரணங்களினால் உருவாக்கப்பட்ட இடத்திலேயே இந்த சிலைகள் கைவிடப்பட்டுள்ளன. ஒருவேளை முறையான சாலை வசதி இல்லாததனால் எடுத்துச் செல்ல முடியாத சூழல் உருவாகி இருக்கலாம் அல்லது வேறு சமூக ,அரசியல் காரணங்களால் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல இயலாமல் இங்கேயே கைவிடப்பட்டிருக்கலாம். மேற்கண்ட நடுகற்களுக்கு அருகே சுமார் 700 மீ வடக்கில் விவசாயம் செய்யக்கூடிய நிலத்தின் கரையில் சுமார் இரண்டு அடி உயரத்தில் கற்சிற்பம் ஒன்று காணப்படுகின்றது. இது ஒரு காவல்காரர் போன்ற தோற்றத்தை ஒத்துள்ளது. இவை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி இருக்கலாம் என அதன் தோற்றத்தின் வழியாக அறியமுடிகிறது. மேலும் இம்மலை அடிவாரப்பகுதியில் அதிக அளவில் இரும்பு உருவாக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களும், இரும்பு உருவாக்கத்தின் போது எஞ்சிய கழிவுகளும் காணப்படுவது மேலும் ஆய்வுக்குறியது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நடுகற்கள் என்பது அந்தப்பகுதிகளில் ஊர் நலனுக்காக போராடி தன்னுயிர் ஈந்தவர்களுக்கு ஊர் மக்களால் வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்டவை. அதுபோல புலியினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காக தன்னுயிர் ஈந்த வீரனுக்கு எழுப்பபட்டவை நடுகற்கள். |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 Aug 2022 |
பார்வைகள் | 22 |
பிடித்தவை | 0 |