சிற்பம்
தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின் பெயர் தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் குறங்கணி நாதர் கோயில்
ஊர் சீனிவாசநல்லூர்
வட்டம் லால்குடி
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
கருவறை விமானத்தின் தென்புற தேவகோட்டத்தில் அமர்ந்துள்ள ஆலமர்ச் செல்வன் தட்சிணாமூர்த்தி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளையும், ஆறங்கங்களையும் உயிர்க்குலத்திற்கு ஓதுவிக்கும் காட்சி. ஆலமரத்தின் கிளையொன்றில் அக்கமாலையும், பையொன்றும் தொங்கவிடப்பட்டுள்ளது. மற்றொரு கிளையில் மேலாடை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. ஆலமரப் பொந்திலிருந்து கூகை ஒன்று எட்டிப்பார்க்கிறது. ஆலமர்ச்செல்வன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். முன்னிரு கைகள் சிதைந்துள்ளன. பின்னங்கைகளில் வலதில் அக்க மாலையும், இடதில் சுவடியும் கொண்டுள்ளார். ஜடாபாரத்துடன் விளங்கும் நான்மறையோதியின் தலையில் மண்டையோடு தலை முகப்பு அணியாக அமைந்துள்ளது. நெற்றியில் ஒரு கண்ணோடு விளங்கும் முக்கண்ணர் வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வலது தொடையின் மேல் வைத்தபடி உடல் நேராகவும், அமர்வு நிலை ஒரு பக்கமாக சாய்த்தும் உள்ள நிலையில் அமர்ந்துள்ளார். இயல்பாக தென்முகக் கடவுள் அமரும் வீராசனத்தில் இருந்து இந்த அமர்வு நிலை சற்று வேறுபட்டுள்ளது. முப்புரிநூல் இடது தோளின் வழியே செல்கிறது. கழுத்தில் கண்டிகை, சவடி அணிந்துள்ளார். நீள் காதுகளில் வலதில் மகண குண்டலமும், இடதில் பத்ர குண்டலமும் அணி செய்கின்றன. தோள்களில் தோள்மாலை, கைகளில் தோள் வளை, முன் வளைகள் அமைந்துள்ளன. கால்களில் பாடகம் அணிந்துள்ளார். வலது காலை முயலகன் மீது வைத்துள்ளார். குப்புறப் படுத்துள்ள முயலகன் வலது கையில் பாம்பைப் பிடித்துள்ளான். கால்கள் இரண்டும் பாதி சிதைந்துள்ளன. அவரது ஆசனத்திற்குக் கீழே மான்கள் இரண்டு காட்டப்பட்டுள்ளன. மறையோதியின் இடையாடை முடிச்சுகள் வலது புறத்திலிருந்து ஆசனத்திற்குக் கீழேத் தொங்குகின்றன. வேதவல்லானின் மேற்புறம் கின்னரர்களும், கணங்களும் காட்டப்பட்டுள்ளனர். அதற்கடுத்து கீழே வலதுபுறம் இணை சிங்கங்களும், இடது புறம் ஒன்றையொன்று அணைத்தபடி இருக்கும் இணை வேங்கைகளும், இதற்கடுத்து கீழே வலது புறத்திலும், இடது புறத்திலும் இரண்டு முனிவர்கள் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர்.
குறிப்புதவிகள்
தட்சிணாமூர்த்தி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்