ஏனோ எனை எழுப்பலானாய்

Author Name

புவி

Published on

Nov 12 2025

           “அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்”

இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும்தானே? வரிகளை விட்டுத்தள்ளுங்கள். பல்லவியின் மெட்டு உங்களுக்கு எளிதில் பிடித்துவிடும். இது தலைமுறை தலைமுறையாய்த் தமிழ்மண்ணில் பாடப்பட்டுக்கொண்டிருக்கும் மெட்டு. ‘நவராத்திரி’ படத்தில் சிவாஜிகணேசனும் சாவித்ரியும் இணைந்து நடித்த ‘சத்தியவான் சாவித்ரி’ இசைநாடகக் காட்சியை நினைவுபடுத்த முடிந்தால் நன்று. அக்காட்சியில் இடம்பெற்ற ‘ஏனோ எனை எழுப்பலானாய்’ என்று தொடங்கும் பாடலைத் தழுவியதுதான் இந்தப் பாடல். இசையமைப்பாளர் தேவா ஏற்கெனவே இந்த மெட்டினைத் தனது பாடலொன்றில் பயன்படுத்தியுள்ளார். ‘மஞ்சுவிரட்டு’ படத்தில் ‘மாமா உன் பெயரை’ பாடலின் சரணங்கள் ‘நெஞ்சுக்குள்ள நேசம் என்னும் நாத்து நட்டேன்’, ‘பத்தமடை பாய்விரிச்சு நான் படுத்தா போச்சு’ என்று தொடங்கும்போது சத்தியவானும் சாவித்ரியும்தான் நினைவுக்கு வருவார்கள். 

சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் மெட்டுகள் பலவும் திரைப்பாடல்களில் தொடர்ந்து எடுத்தாளப்பட்டாலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘ஸ்ரீவள்ளி’ (1945) அவரது சந்தங்களையும் இசைக்கூறுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது. ‘காயாத கானகத்தே ’பாடல் நாடகத்தையொட்டியே பாடி நடிக்கப்பட்டது. டி.ஆர்.மகாலிங்கம் பாடி நடித்த இப்பாடல், பின்பு ‘ராஜபார்ட் ரங்கதுரை’ (1973), ‘வேலுண்டு வினையில்லை’(1987) ஆகிய படங்களிலும் பயன்படுத்தப்பட்டது. மகாலிங்கம் போலவே விஜயகாந்தும் உமிழ்நீரை விழுங்கியபடி நடித்து அப்பாடலுக்கான முத்திரைகளைப் பதித்திருப்பார்.

தமிழில் சினிமாவின் வருகைக்கு முன்பு நாடகங்களே முக்கியப் பொழுதுபோக்கு. அந்தக் கலைவடிவத்தின் வளர்ச்சியிலும் சீர்திருத்தங்களிலும் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922). தமிழ் நாடகத் தலைமையாசிரியராகப் போற்றப்படுபவர். தம்முடைய இருபத்து நான்காம் அகவையில் (1891) கணக்காளர் தொழிலைத் துறந்து, நாடகத்துறையில் நடிகராக அடியெடுத்துவைத்த சுவாமிகள், நாடக ஆசிரியராகவும் இசையறிஞராகவும் பெரும்பங்காற்றினார். 1910ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடகசபை என்ற சபையை நடத்தினார். அவர் வழிநடத்திய, உருவாக்கிய பாலர் சபைகள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் பயில்விக்கும் பல்கலைக்கழகங்களாக விளங்கின. அவரிடம் பயிற்சிபெற்ற கலைஞர்கள் தமிழ் நாடகவுலகின் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக விளங்கினர்.

பாடல்களால் நிறைந்திருந்த மரபார்ந்த கூத்து வடிவங்களுக்குத் தம்முடைய வசன சேர்க்கையால் புதுவடிவம் அளித்தவர் சுவாமிகள். கதாகாலட்சேபம் போன்ற மரபான நிகழ்த்துகலை வடிவங்களோடு பார்சி, ஆங்கில நாடகங்களின் கூறுகளையும் இணைத்துப் புதுமைகள் சேர்த்தவர். இன்றும் ஊர்த்திருவிழாக்களில் சங்கரதாஸ் சுவாமிகளின் இசைநாடகங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. சுவாமிகளின் நாடகங்களைக் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருபவர் தமிழிசை அறிஞர் அரிமளம் சு.பத்மநாபன். சுவாமிகளைக் குறித்த அவரது இரண்டு நூல்கள் அண்மையில் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

‘தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக்கூறுகள்’(முதற்பதிப்பு, 2000) என்ற நூல், கே.ஏ.குணசேகரன் அவர்களது மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. சுவாமிகளின் நாடகங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களின் இசைக்கூறுகளைக் குறித்த இந்த ஆய்வில் அவர் எழுதிய வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்ரி, கோவலன் சரித்திரம், ஞானசௌந்தரி ஆகிய ஐந்து நாடகங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நாடகங்களில் திருமுறை வழிவந்த தமிழிசையோடு தென்னகச் செவ்விசை, நாட்டார் இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை வடிவங்கள் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்று இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தமிழ் அகத்துறை இலக்கிய மரபில் அமைந்த ‘வள்ளி திருமணத்தில்’ மேற்கத்திய இசைவடிவங்களைத் தவிர்த்த சுவாமிகள், மேற்கத்திய நாடகங்களின் பின்னணியைக் கொண்ட ‘ஞானசௌந்தரி’யில் நாட்டுப்புற இசைவடிவங்களைத் தவிர்த்துள்ளார் என்ற அவதானிப்பு. நாடகங்களின் காட்சிகளுக்கும் இசைக்குமான தொடர்பு இத்தகைய கண்டறிதல்களின் வாயிலாக உணர்த்தப்படுகிறது. நடிகர்களின் இசைத்திறன்களுக்கு ஏற்பவும் பாத்திரங்களின் இயல்புகளுக்கேற்பவும் தாளம், தாளநடைகள், சந்தம், ராகங்கள், உத்திமுறைகள் கையாளப்பட்டுள்ளதை உதாரணங்களின்வழி எடுத்துக்காட்டுகிறார் அரிமளம் பத்மநாபன்.

இக்குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ‘சத்தியவான் சாவித்ரி’யின் ‘ஏனோ எனை எழுப்பலானாய்’ மெட்டானது தென்னகச் செவ்விசையின் ஆபேரி ராகத்தில் அமைந்து, ஹிந்துஸ்தானியில் அதையொத்த ராகமான பீம்பிளாஸ் நுட்பங்களையும் வயப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது போன்ற குறிப்புகளும் இந்நூலில் ஏராளம் உண்டு. பி.எஸ்.நாகராஜ பாகவதர், ஏ.கே.காளீஸ்வரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் முதலான முதுபெரும் நடிகர்களை நேர்கண்டு அவர் நடத்திய கள ஆய்வுகளும் அவற்றின்வழி கிடைக்கப்பெற்ற அரிய தகவல்களும் இந்நூலைத் தமிழிசை வரலாற்றின் முக்கியமான நூல்களில் ஒன்றாக்கியுள்ளன.

‘சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் – ஓர் ஆய்வு’ (டிசம்பர் 2002) என்ற தலைப்பிலான அரிமளம் பத்மநாபனின் மற்றொரு நூல், சுவாமிகளின் 15 நாடகங்களை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சந்த ஆய்வு. மரபிலக்கியங்கள், பக்தி இலக்கியங்களில் மட்டுமே நிகழ்த்தப்பட்டுவந்த சந்த ஆய்வுகள், இந்நூல் வாயிலாக நாடகங்களைக் குறித்தும் தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகவும் இருபது வகைகளாகவும் தொல்காப்பியத்தில் வண்ணம் சுட்டப்படுகிறது. வண்ணமும் சந்தமும் ஒன்றுபோல் தோன்றினும் இரண்டும் ஒன்றல்ல, அனைத்து வண்ணங்களும் சந்தங்கள், ஆனால் அனைத்து சந்தங்களும் வண்ணங்கள் அல்ல என்ற வேறுபாட்டை நூலாசிரியர் தொடர்ந்து விளக்கிவருபவர். சுவாமிகளின் நாடகங்களில் கையாளப்பட்ட சந்தங்கள், ஓசை நயத்திற்கானவை மட்டுமல்ல; நாடகத்தின் பல்வேறு கூறுகளுடன் அவை இணைந்து செயலாற்றுகின்றன என்பதை இந்நூலின் வாயிலாக நிறுவியிருக்கிறார் அரிமளம் சு.பத்மநாபன்.

இசைநூல்களை வாசித்து அறிந்துகொள்வதைக் காட்டிலும் அவற்றைக் காதாரப் பாடம்கேட்பதே நுட்பங்களை உணர வாய்ப்பாக அமையும். அதற்கு வாய்ப்பாக, நூலாசிரியர் இதே பொருள் குறித்து சென்னை சங்கீத வித்வத் சபையில் ஆற்றிய உரையின் இணைப்பும் இக்குறிப்பின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளது.

 

 நவம்.13: சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாள்

 

இணைப்புகள்:

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக்கூறுகள்

சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் – ஓர் ஆய்வு

சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் குறித்து நூலாசிரியர் சென்னை சங்கீத வித்வத் சபையில் ஆற்றிய உரை- 2011 

  • Share this blog
  • instagram
  • facebook
  • linkedin
  • twitter

Uploaded By

Tamil virtual academy