Author Name
தமிழ் மின் நூலகம்
Published on
Aug 10 2024
வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாடம் நடத்திய தந்தை பெரியாரின் கொள்கைவழி நடந்த பேரறிஞர் அண்ணா, “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்றார். முன்னரெல்லாம், வாசகர்கள் நூலகத்தைத் தேடிச் சென்று புத்தகம் வாசித்தார்கள். இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் வாசகரைத் தேடி அவர்களது வரவேற்பறைக்கே வருகிறது மின்னூலகம். இணையம் வழியே வாசகர்கள் விரும்பிய நூல்களை வாசிக்கும் வசதியை இம்மின்னூலகம் அளிக்கிறது. அனைவரும் இருந்த இடத்தில் இருந்தபடியே நூலகத்தை அணுகி, அரிய நூல்களையும் வாசிக்கலாம்; பதிவிறக்கியும் வைத்துக்கொள்ளலாம். அப்படியொரு மின்னூலகத்தை (www.tamildigitallibrary.in) தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ளது.
மின்னூலகத்தின் பக்கங்களில் அரிய இதழ்களும் நூல்களும் ஏராளமாய்ப் பதிவேற்றப்பட்டுள்ளன. நூல்களை வாசிக்கத் தொடங்கினால் பல்வேறுபட்ட கருத்துச் செறிவால் உள்ளம் நிரம்பும். அறிவுத் தாகம் கொண்டோரை ஆர்வத்துடன் அரவணைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இம்மின்னூலகம்.
ஒரு நூலகம் உருவானது
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகம் ஒரு மிகப் பெரும் ஆவணக் கருவூலம். இது வெறும் புகழ்ச்சி வாக்கியமன்று என்பதை இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர் உணர்ந்துகொள்வார்கள். தற்போதைய தொழில்நுட்பப் புரட்சிக் காலத்தில் மின்னுருவாக்கத் தொழில்நுட்பமானது அச்சுத் துறையில் பல்வேறு வியக்கத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அந்த மாற்றத்தின் விளைவால் இந்த மின்னூலகம் உருவாகியுள்ளது.
மின்னூலகம் ‘தமிழ் இணையக் கல்விக்கழக’த்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தை 17.02.2001 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிவைத்தார். 2002இல் தமிழ் மின்னூலகம் (www.tamilvu.org) அமைக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணையக் கல்விக்கழகம். இதில் 432 தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவில் html தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன; 2000–க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் PDF கோப்பு வடிவில் பதிவேற்றப்பட்டன.
நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மின்னுருவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நுலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மின்னுருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்களில் மின்னுருவாக்கப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
வளமாகும் வாசிப்பு
2015 இறுதியில் ஏற்பட்ட சென்னைப் பெருவெள்ளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னுருவாக்கப் பணிகளை வெகுவாகப் பாதித்தது. சென்னை வெள்ளம் மின்னுருவாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டு வடிந்தது. நான்கு ஆண்டுகளில் சுமார் 30,000 நூல்களும், ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட 53 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும் மின்னுருவாக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்கிடையே மின்னூலக இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்னூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. குறுகியகால இடைவெளியில் இந்த இணையதளத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்; இதுவரை ஏறத்தாழ 6.5 கோடி முறை பார்வையிடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 21 லட்சம் பதிவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புத்தகப் பெட்டகம்
தமிழ் மின்னூலகத் தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் ஆகிய துறைகளைக் கொண்ட அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து மின்னுருவாக்கம் நடைபெற்றுவருகிறது. இதுவரை 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இணையதளம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகிறது; அரிய ஆவணங்களைச் சேகரிக்கிறது. இவற்றுடன் மற்றுமொரு மைல்கல்லாகத் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் 3,321 ஆவண அட்டவணைகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு குறித்த 112 வரலாற்று ஆவணத் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இணையவழிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மின்னூலகத்தின் பகுதியாக இருக்கும் தகவலாற்றுப்படை (www.tagavalaatruppadai.in/) தளத்தில் தமிழ்நாட்டின் வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், நாணயங்கள், அகழாய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற அரிய ஆவணங்கள் நிறைந்துள்ளன.
இந்த மின்னூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் பெருவாரியானவை குறிப்பிடத்தக்கவை என்றபோதும் சில நூல்கள் மிகவும் முக்கியமானவை. எடுத்துக்காட்டாக, தமிழிலிருந்து லத்தீன் மொழியில் சீகன் பால்கு அச்சிட்ட ‘Grammatica Tamulica’ என்னும் தமிழ் இலக்கண நூலையும், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், மெட்ராஸ் கூரியர் (தென்னிந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாள்), சித்த மருத்துவச் சுவடிகள் மற்றும் ஆவணங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவற்றையும் சொல்லலாம். மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என ஒரு பெரும் அறிவுக் கருவூலம் இந்நூலகம்.
தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள 10 தொகுதிகளைக் கொண்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஆகியவை தலைப்புச் சொல் தேடும் வசதியுடன் பதிவேற்றப்பட்டுள்ளன. மின்னூலகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘தமிழ்ப் பேரகராதி’ (ஆறு தொகுதிகள்), சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம்–தமிழ் அகராதி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட பால்ஸ் ஆங்கிலம்–தமிழ் அகராதி, A.C.செட்டியாரின் ஆங்கிலம்–தமிழ் அகராதி, மு.சண்முகம் பிள்ளையவர்கள் பதிப்பித்துள்ள தமிழ்–தமிழ் அகரமுதலி, த.இ.க.வின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி ஆகிய அகராதிகள் தேடும் வசதியோடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
திராவிடச் சித்தாந்தம், செம்மொழியான தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, தொல்லியல் தொடர்பான அரிய நூல்களும் இதழ்களும் இங்கே கிடைக்கின்றன. குறிப்பாக, இராபர்டு கால்டுவெல் அவர்களின், ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’ மற்றும் ‘A History of Tinnevelly’ போன்ற நூல்களுடன் தந்தைப் பெரியாரின் ‘குடிஅரசு’, அறிஞர் அண்ணாவின் பல படைப்புகள், ‘திராவிடநாடு’, ‘நம் நாடு’, ‘தென்னகம்’, ‘போர்வாள்’, ‘மன்றம்’ போன்ற பல திராவிட இயக்க இதழ்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக 1 லட்சம் நூல்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதே மின்னூலகத்தின் இலக்கு.
தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைத் துறையினர், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்குமான அரிய புதையலாகத் தமிழ் மின்னூலகம் திகழ்ந்துவருகிறது.
அடுத்த கட்ட வளர்ச்சி
அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் நூலகத்தில் உள்ள அனைத்து அச்சு ஆவணங்களையும் உருபட வடிவிலிருந்து தேடுதல் வசதி கொண்ட கோப்புகளாக மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 16,000 நூல்கள் இப்படி மாற்றப்பட்டுள்ளன. மேலும் e-pub, daisy போன்ற வடிவங்களில் மாற்றி மாற்றுத்திறனாளிகளும் இந்தத் தளத்தை எளிதாகப் பயன்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அரிய ஒலி-ஒளி ஆவணங்கள், ஒளிப்படங்கள், நிலவரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்ட பல்லூடக மின்னூலகமாக விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதில், குறிப்பிடத்தக்க விதமாக பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அறிஞர்களின் ஒலி, ஒளிப் பொழிவுகள் நவீனத் தொழில்நுட்பத்தில் வன்வடிவத்திலிருந்து மென்வடிவத்திற்கு மாற்றப்பட்டு விரைவில் பொதுவெளிப் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவுள்ளன. மேலும், தமிழ்நாட்டு வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான தகவல்களைப் புவிசார் தொழில்நுட்பத்தில் பெறும் விதமாகத் தமிழ்நாடு பண்பாட்டு மின்நிலவரையேடு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் முதற்கட்டமாக மதுரை மண்டலம் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.
‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150ஆம் பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மின்மயப்படுத்தப்பட்டு www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கம் 18.11.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது.
‘புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்’ என்ற முத்தமிழறிஞரின் கூற்றுக்கேற்ப, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் அரிய பல நூல்களையும் ஆவணங்களையும் விரல் சொடுக்கில் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்தே நினைத்த நேரத்தில் படிப்பதற்கான ஒரு மகத்தான அறிவுக் கருவூலம்தான் தமிழ் மின்னூலகம்.
- செ.காமாட்சி, இரா.சித்தானை