தமிழ் மின் நூலகம்: மகத்தான ஆவண வளம்!

Author Name

தமிழ் மின் நூலகம்

Published on

Aug 10 2024

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவான தமிழ் மின் நூலகமானது (https://www.tamildigitallibrary.in/) புத்தகங்களை வாசிப்பதற்கான டிஜிட்டல் தளம் என்ற இடத்தைத் தாண்டி மிக முக்கியமான ஆவணக் கருவூலமாக உருமாறியிருக்கிறது எனலாம். 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் 3,321 ஆவண அட்டவணைகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு குறித்த 112 வரலாற்று ஆவணத் தொகுதிகள் என விலை மதிப்பில்லா பொக்கிஷமாகியிருக்கிறது. வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தமிழ் மின் நூலகம் ஓர் அரிய அறிவுப் பெட்டகம்.

மின் நூலகத்தின் தேவை என்பது பிரதானமாக இரண்டு தருணங்களில் முக்கியமானது. ஒன்று, அச்சுப் புத்தகங்களுக்கான ஆயுள்காலம் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டது. சேதமடையாமல் அவற்றைப் பாதுகாத்து வைப்பதும் எளிதான காரியமன்று. தடைக்கும் பறிமுதலுக்கும் அழித்தொழிப்புக்கும் ஆளான நூலகங்களும் புத்தகங்களும் ஏராளம் என்பதை நாம் அறிவோம். புத்தகம் ஒரு காலத்தின் சாட்சியாகவும் இருக்கிறது என்ற வகையில் அதன் ஆயுள்காலத்தை நீட்டிக்கும் பொறுப்பை மின் நூலகம் ஏற்றுக் கொள்கிறது. வரலாறு என்பது கடந்து வந்த பாதை மட்டுமல்ல; அது இன்றைய காலத்தைப் புரிந்துக் கொள்ளவும் எதிர்காலத்துக்கு வழிகாட்டவும் வரலாறுக்கு ஆற்றல் உண்டு என்ற பின்னணியில் மின் நூலகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் அச்சிடப்படும் புத்தகங்களை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை மின் நூலகம் மேற்கொள்கிறது. இத்தகைய பணியை அரசு கையில் எடுக்கும்போது அளப்பரிய அறிவுச் செல்வங்களெல்லாம் விலையின்றிக் கிடைக்கின்றன. இதனால் அரிய நூல்களையும் ஆவணங்களையும் சாமானியர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. வாசிப்பும் ஆய்வும் குறிப்பிட்ட சாராருக்கானதாக அல்லாமல் ஜனநாயகப்படுத்தப்படுகிறது.

தமிழ் மின் நூலகம் உருவான வரலாறு

கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையில், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்றதமிழிணையம்-99’ மாநாட்டின் விளைச்சல்தான் தமிழ் இணையக் கல்விக்கழகம். 2001 பிப்ரவரி 17 அன்று கலைஞர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டு பின்னர் 2010 ஜூலை 16 முதல் தமிழ் இணையக் கல்விக்கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது. உலகு தழுவிய தமிழர்களுக்கு இணையம் வழியாக தமிழ் கற்றுத்தருவதும், கணித் தமிழை வளர்ப்பதும், மின் நூலகம் அமைப்பதும் இதன் முதன்மையான பணிகளாகும்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டிலேயே (2002) தமிழ் மின் நூலகம் அமைக்கும் முன்னோடி முயற்சியும் கையிலெடுக்கப்பட்டு, https://www.tamilvu.org/ என்ற தளத்திலேயே இந்நூலகம் செயல்பட்டு வந்தது. அப்போது 432 தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவில் ஹெச்டிஎம்எல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டன; 2000–க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் பிடிஎஃப் கோப்பு வடிவில் பதிவேற்றப்பட்டன. முதலில் இணையம் வழியாக தமிழ் கற்க வரும் புலம்பெயர் தமிழர்கள் வாசிப்பதற்கான தளமாக இது தொடங்கப்பட்டாலும் நாளடைவில் இதன் எல்லை விரிவடைந்தது. வாசிப்புக்கும் ஆய்வுக்குமான களமாக ஆனது.

இதன் காரணமாகவும், தமிழ் நூல்கள், இதழ்கள், பருவ வெளியீடுகள், இதர ஆவணங்கள் என நம்மிடம் பெருந்திரளான ஆவணங்கள் இருந்ததாலும் மின்னுருவாக்கப் பணியை முடுக்கிவிடத் திட்டமிடப்பட்டது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தளங்கள், சிறுசிறு மின்னுருவாக்க முயற்சிகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னணியில் தீவிரமாகச் செயல்பட்டவர், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அன்றைய இயக்குநரும் இன்றைய தலைவருமான த.உதயச்சந்திரன். இவருடைய வழிகாட்டுதலின்கீழ் மின்னுருவாக்கத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டது.

இதன்படி, தமிழின் மிகப் பெரும் அறிவு வளமாகத் திகழும் கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மின்னுருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே மின்னுருவாக்கம் நடைபெற்றிருந்தால் அந்த ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன.

பெருவெள்ளம் உணர்த்திய செய்தி

புதிய முன்னெடுப்புகள் பலவும் ஒரு நெருக்கடியிலிருந்து உருவானதற்கான எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் ஏராளம் உண்டு. அப்படி, தமிழ் மின் நூலகப் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்திச் செல்ல வந்தது சென்னைப் பெருவெள்ளம். தலைநகர் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த தமிழ் அறிவு வளங்கள் பலவும் இந்தப் பெருவெள்ளத்தால் அழிந்து போகும் அபாயம் உருவானது. மீட்டெடுக்க முடியாமல் சில ஆவணங்கள் அந்தப் பேரிடருக்கு இரையாகவும் செய்தன. இதற்குப் பின்னர்தான் மின்னுருவாக்கப் பணிகள் வேகப்படுத்தப்பட்டன. 4 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணப் பக்கங்களும் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன.

மின்னுருவாக்கம் நடந்துக் கொண்டிருக்கும் வேளையிலே இன்னொருபுறம் தமிழ் மின் நூலகத்துக்கெனப் புதிய இணையதளம் (https://www.tamildigitallibrary.in/) அமைக்கும் பணிகளும் நடந்தன. 2002–இல் தூவப்பட்ட மின்னூலகத்துக்கான விதைகள் பெரும் விருட்சங்களாகச் செழித்து வளர்ந்ததைத் தொடர்ந்து, தமிழ் மின் நூலகம் 2017 அக்டோபர் 11 அன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

மின் நூலகத்தில் என்னென்ன இருக்கின்றன?

இலக்கணம், இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி நூல்கள், சித்தர் பாடல்கள், தனிப் பாடல்கள், இருபதாம் நூற்றாண்டு கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு உரைநடைகள் ஆகிய பிரிவுகளில் புத்தகங்கள் உள்ளன. அரசியல், இலக்கியம், மொழி, சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தகங்களும் இதழ்களும் ஓலைச்சுவடிகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் பேரகராதி, பழநியப்பா சகோதரர்களின் பால்ஸ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம், மு.சண்முகம் பிள்ளை தமிழ்-தமிழ் அகரமுதலி உள்ளிட்ட அகராதிகள் இருக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகளும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

இவையெல்லாம் போக, தமிழ் மின் நூலகத்தின் பகுதியாக இருக்கும் தகவலாற்றுப்படை (https://www.tagavalaatruppadai.in/) இன்னொரு முக்கியமான தளமாகும். தமிழ் மின் நூலகம் அளவுக்குப் பயன்படுத்தப்படாத இந்தத் தளத்தில் தமிழ்நாட்டின் வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், நாணயங்கள், அகழாய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற அரிய ஆவணங்கள் நிறைந்திருக்கின்றன. இந்த ஒவ்வொரு வகைமையின்கீழ் துணை வகைமைகள் பிரிக்கப்பட்டு உயர் தரத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களோடு ஆதாரபூர்வமான குறிப்புகளும் அடங்கிய தளம் இது.

புதிய இலக்குகள் என்ன?

85 ஆயிரம் நூல்களைக் கொண்டிருக்கும் இந்நூலகம் 1 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டும் இலக்கோடு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது நூலகத்திலுள்ள புத்தகங்களை ஆசிரியரின் பெயர், புத்தகத்தின் பெயர், வகைமை வாரியாகத் தேட முடியும் என்றாலும் ஏதேனும் ஒரு சொல்லை வைத்து கூடப் புத்தகத்தைத் தேடும் வகையில் இந்தத் தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 16 ஆயிரம் புத்தகங்கள் உருபட (image) வடிவிலிருந்து தேடுதல் வசதி கொண்ட கோப்புகளாக மாற்றப்பட்டு விட்டன என்றாலும் தளத்திலுள்ள எல்லா நூல்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்படி மாற்றப்பட்ட பிறகு இந்நூலகத்தைகிண்டில்போன்ற நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களில் வாசிக்க முடியும். மாற்றுத் திறனாளிகளும் நூலகத்தை எளிதாகப் பயன்படுத்த முடியும். இதோடு, தமிழ் மின் நூலகத்துக்கெனத் தனியாக ஒரு செயலி உருவாக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.

புகைப்படங்கள், நிலவரைடபங்கள், தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகளின் உரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்லூடக மின்நூலகமாக விரிவாக்கும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக, பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகளோடு தமிழறிஞர்களின் ஒலிப்பொழிவுகளும் ஒளிப்பொழிவுகளும் பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்குத் தமிழும் ஈடுகொடுக்க வேண்டும் என்றால் இத்தகைய மூலாதாரங்களெல்லாம் மிகமிக அவசியமாகும். தொலைநோக்குப் பார்வையோடு இவற்றில் அக்கறை காட்டப்பட்டு வருகின்றன.

தமிழ் மின் நூலகம் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டிருந்தாலும், 21 லட்சம் பதிவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அதன் பிரம்மாண்டமான அறிவுச் சேகரத்தை ஒப்பிட இதெல்லாம் சொற்ப எண்ணிக்கைதான். தமிழ் மின் நூலகத்திலுள்ள புத்தகங்கள் பல்வேறு பதிப்பகங்களால் மீண்டும் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. மின் நூலகத்திலுள்ள ஆய்வு வளங்களெல்லாம் ஆய்வாளர்களின் பார்வையில் மீண்டும் புதிய கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், இந்நூலகம் கொடுக்கத் தயாராக இருப்பதைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் நிறைய கரங்கள் நீள வேண்டும்; அதன் மூலாதாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

(ஆகஸ்ட்போதிஇதழில் வெளியான கட்டுரை)

- த.ராஜன்

  • Share this blog
  • instagram
  • facebook
  • linkedin
  • twitter

Uploaded By

Tamil virtual academy