தகவல் தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சியில் தமிழ் மொழி பின்தங்கிவிடக் கூடாது

Author Name

தமிழ் மின் நூலகம்

Published on

Aug 10 2024

உலகத் தமிழிணையம்99 கருத்தரங்க மாநாட்டில், 1999 பிப்ரவரி 7 அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இது. கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தத் துறையில் தமிழ்நாடு அரசும் முத்தமிழறிஞர் கலைஞரும் கண்ட கனவை எண்ணி இன்று நாம் வியக்காமல் இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு எப்படிச் செயல்படத் தொடங்கியது என்பதை உணர்த்துவதற்கு இந்த உரை ஒரு நல்ல உதாரணம்.

                 இன்று நடைபெறுகின்ற இந்த மாநாட்டுக் கருத்தரங்கம் எந்தக் குறிக்கோளோடு நடைபெறுகிறதென்பதை வரவேற்புரையிலிருந்து எனக்கு முன்னால் சிறப்புரை ஆற்றியவர்கள் உரை வரை கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தினைத் தமிழகத்தில் சீராக வளர்ப்பதற்கு வழிகாட்டத்தக்க வகையில் என்னுடைய தலைமையில் மாநில அளவிலான தகவல் தொழில்நுட்பப் பணி முனைப்புக்குழு (State Level Task Force on Information Technology) 8.10.1998 அன்று அமைக்கப்பட்டது. இதன் துணைத் தலைவராக மத்திய தொழில்துறையின் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மென்பொருள் தொழில் மேம்பாடு, பள்ளிகளில் கணினி அறிமுகத்திற்குப் பாடத்திட்டத்தை உருவாக்குதல் அனைத்துத் துறைகளிலும் கணினியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவும் வகையில் டாக்டர் அனந்த கிருஷ்ணனின் தலைமையில் துணைக்குழு ஒன்றும் 8.10.1998 அன்றே அமைக்கப்பட்டுள்ளது.

உலகத்தமிழ் இணையக் கருத்தரங்க மாநாட்டினை நடத்த முடிவு

பணி முனைப்புக்குழு, துணைக்குழு ஆகியவற்றின் முதல் கூட்டம் 28.11.1998 அன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குரிய பணிகளைத் தீவிரப்படுத்துதல் தொடர்பாகப் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த உலகத்தமிழ் இணையம் கருத்தரங்க மாநாட்டினை இந்த நாள்களில் சென்னையில் நடத்திடவும்அன்றே முடிவெடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டின் வரவேற்புக்குழு முரசொலி மாறன் தலைமையில் 2.12.1998 அன்று அமைக்கப்பட்டது.

விவாதிக்கப்படவிருக்கும் மூன்று முக்கியப் பொருள்கள்

இந்த முயற்சிகள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல; சென்ற ஆண்டிலிருந்தே உலகத்தில் உள்ள எல்லா அறிஞர்களையும் தொடர்புகொண்டு அதன் தொடர்ச்சியாக இன்று இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த உலகத்தமிழ் இணையக் கருத்தரங்க மாநாட்டில் மூன்று முக்கியப் பொருள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

·         தமிழ் விசைப்பலகை வடிவமைப்பைத் தரப்படுத்துதல்.

·         தமிழ் வரிவடிவக் குறியீட்டு முறையைத் தரப்படுத்துதல்.

·         இண்டர்நெட் மல்டி மீடியா பயன்பாடுகளில் தமிழைச் செயல்படுத்துதல்.

இதைக் குறித்துத்தான் இந்தக் கருத்தரங்கத்திலே விவாதிக்கப்படவிருக்கின்றது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகளின் பட்டியலைப் பார்த்தேன், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், குறிப்பாக மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், மொரிஷியஸ் இங்கெல்லாம் தமிழ் வழங்கப்படுகிறது. இதில் மொரிஷியஸ் தவிர்த்த நான் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு ஆட்சி மொழி என்பதை நான் பெருமிதத்தோடு இங்கே கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்த நாடுகளிலிருந்தும் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அந்த நாடுகளிலிருந்தும் தூதுக் குழுக்கள் வந்திருப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல; ஆனால், அங்கிருந்து மாத்திரமல்ல, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நார்வே, அயர்லாந்து, குவைத் என உலகின் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் இங்கே வருகைபுரிந்திருக்கின்றார்கள். அதுவும் அவர்களெல்லாம் சொந்தச் செலவிலே வந்திருக்கிறார்கள் என்பதுதான் போற்றத்தக்க, புகழத்தக்க, நமக்குச் செலவில்லை என்று நாம் மகிழத்தக்க ஒன்றாகும்.

பல நாடுகளிலிருந்து ஆர்வத்தோடு வந்துள்ள பிரதிநிதிகள்

இதைப் பார்க்கும்போது, இப்படி ஆர்வத்தோடு பல நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகளையெல்லாம் பார்க்கும்போது என் உடல் புல்லரிக்கிறது! உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. இந்த அறிஞர் பெருமக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் என் சார்பாகவும் தமிழக அரசின் சார்பாகவும் வணக்கத்தையும் நன்றியையும் மீண்டும் மீண்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிங்கப்பூர் நிபுணர் குழுத் தலைவர் கோவிந்தசாமி அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல இந்தக் கருத்தரங்க மாநாட்டிற்கு முன்னோடியாக 1997இல் சிங்கப்பூரில் அதன் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நெட் 1997 என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் டாக்டர் Tan Tin Wee அவர்களும், கோவிந்தசாமி அவர்களும் முக்கியப் பங்கேற்றதை நினைவுகூர்கிறேன்.

அந்தக் கருத்தரங்கிற்குத் தமிழக அரசின் சார்பாகத் தமிழக அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்களை அன்றைக்கு நான் அனுப்பிவைத்ததையும் கோவிந்தசாமி அவர்கள் இங்கே நினைவுபடுத்தினார்கள்.

அந்த மாநாட்டில் கணிப்பொறி இணையத்திலும் தகவல் நெடுஞ்சாலையிலும் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் கருத்தரங்கத்திலே கலந்துகொண்டவர்கள் அன்றைக்குச் சுட்டிக்காட்டினர்.

அதாவது அவர்கள் நோயைக் கண்டறிந்தவர்கள். மருந்தை அப்போது காணவில்லை.

நோய்க்குரிய மருந்தைக் காணத்தான் இந்த மாநாடு

அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத்தான், அதற்குப் பரிகாரம் காணத்தான் இம்மாநாட்டையும் கருத்தரங்கையும் நாம் கூட்டியிருக்கிறோம் என்று சொன்னால் அது தவறல்ல, மிகையாகாது.

அறிஞர் பெருமக்களாகிய நீங்கள் ஒரு முடிவினை எடுத்து அதை இந்த மேடையில் நானும், மலேசிய நாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களும், இலங்கை நாட்டு அமைச்சர் தொண்டைமான் அவர்களும், சிங்கப்பூர் சார்பாக வந்துள்ள கோவிந்தசாமி அவர்களும், மொரிஷியஸ் நாட்டு அமைச்சர் ராமசாமி சிதம்பரம் பிள்ளையும், புதுவை முதலமைச்சர் ஜானகிராமனும் ஏற்றுக்கொண்டுவிட்டால் அதைத் தமிழ்கூறும் நல்லுலகே ஏற்றுக்கொண்டதாகப் பொருள் என்று நான் கருதுகிறேன்.

மென்பொருள்களைத் தயார் செய்யும் தனியார் துறையும் இதை வரவேற்கும் என்பதில் அய்யமில்லை.

நாளைக்கு நீங்கள் எடுக்கப்போகின்ற முடிவைத்தான் சொல்கிறேன்.

ஏனெனில், தமிழக அரசு பிரம்மாண்டமான முறையில் தகவல் புரட்சியை மக்களிடத்திலே எடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறியை நுழைத்திடத் தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது.

இம்மாநாடு அங்கீகரிக்கும் மென்பொருள்களைத்தான் தமிழக அரசு இனிமேல் வாங்கும் என்ற உறுதியையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுபோலவே அதுதான் மலேசியாவிலும் இலங்கையிலும் மொரிஷியசிலும் சிங்கப்பூரிலும் மற்றும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் பயன்படுத்தப்படும் என நம்புகிறேன்.

எனவே, தனியார் துறை இதைக் கவனிக்கத் தவறாது என்றும் கருதுகிறேன். ஆனால், ஒன்று கருத்தரங்கில் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இரண்டு தமிழர்கள் ஒன்றுகூடினால் (கூடுவது சிரமம்) தகராறுதான், போர்தான் என்பதை அனுபவரீதியாக நாமெல்லாம் அறிவோம். இன்றல்ல, அந்தக் காலத்திலேயே ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் போட்டுக்கொண்ட சண்டை நமக்கு இலக்கியரீதியாகக் கிடைத்திருக்கின்றது.

நான் இங்கே நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கு குறித்து, சிங்கப்பூரில் நோயைக் கண்டுபிடித்தோம், இங்கே மருந்து கண்டுபிடிக்கக் கூடியிருக்கிறோம் என்று சொன்னேன். ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல விரும்புகிறேன்.

சிறந்த மருத்துவர்கள் திறமைமிக்க மருத்துவர்கள் ஆற்றல் வாய்ந்த மருத்துவர்கள் நான்கு பேர் கூடினால் ஒருமித்த கருத்தையெடுப்பது கஷ்டம். மருத்துவர்களைப் போலத்தான் இங்கே நீங்கள் கூடியிருக்கிறீர்கள். எனவேதான் ஒருமித்த கருத்தை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழை ஒருபோதும் தூங்கவிடக் கூடாது

ஒரு நிகழ்ச்சி. வரவேற்புக் குழுத்தலைவர் முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வத்திற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதயத்தில் வலி ஏற்பட்டு ஆபத்தான கட்டத்திலே சென்னைப் பொது மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். நான் அப்போது மதுரையிலே ஒரு கூட்டத்திலே பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தகவல் வந்து அங்கிருந்து காரிலே புறப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறேன். அதற்கிடையே அன்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சி இதய வலி ஏற்பட்டவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காகத் தூங்க வேண்டும். எனவே, அவரைத் தூங்கவைக்க என்ன செய்யலாமென்று இரவு பத்து மணிக்குத் தொடங்கிய மருத்துவர்களின் ஆலோசனை நான்கைந்து தலைசிறந்த மருத்துவர்கள் இதய சிகிச்சைக்காகவே தனியாகப் படித்த மருத்துவர்கள் விவாதித்தார்கள். ஒருவர் வேலியம்’ (Valium) கொடுத்தால் தூக்கம் வரும். அதைக் கொடுக்கலாம் என்கிறார். இன்னொருவர் அந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது என்கிறார். இல்லையில்லை. பெதடின் இஞ்செக்ஷன் கொடுக்கலாம் என்று இன்னொரு மருத்துவர் கூறுகிறார். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அந்த அறையிலிருந்து நர்ஸ் வெளியே வந்தார். பேஷண்ட் என்ன செய்கிறார் என்று மருத்துவர்கள் கேட்க, நன்றாகத் தூங்கிவிட்டார் என்று நர்ஸ் சொன்னார். பேஷண்ட் தூங்கலாம், அறிஞர் பெருமக்களே, தமிழைத் தூங்கவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.

நீங்கள் தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் மட்டுமல்ல, கணிப்பொறி வல்லுநர்களும்கூட.

எனவே, உங்களிடம் Scientific temper விட்டுக்கொடுக்கும் விஞ்ஞான மனப்பான்மை இருக்கும் என்று நம்புகின்றேன். நீங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு, எத்தனையோ இரவுகள் கண்விழித்து, உங்கள் மென்பொருளைக் கண்டுபிடித்திருப்பீர்கள். எனக்குத் தெரியும். எனவே, ஒவ்வொருவரும் தன் குஞ்சுதான் பொன்குஞ்சு என்று கருதக்கூடும். அதில் தவறில்லை. ஒருவகையில் நானும் ஒரு படைப்பாளிதான்! உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது.

ஆனால் தகவல் புரட்சி காட்டுத் தீயாகப் பரவிக்கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது. இன்று கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த மாதம் பழசாகிவிடுகிறது அத்தகைய வேகமான முன்னேற்றங்கள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. இந்த மின்னல் வேக வளர்ச்சியில் நாம் பின்தங்கி விடக் கூடாது. நம் மொழி, தமிழ் மொழி பின்தங்கிவிடக் கூடாது.

தரநிர்ணயம் செய்திட வல்லுநர்களே வாரீர் !

எனவே தர நிர்ணயம் செய்திட வாரீர்! என்று உங்களையெல்லாம் அழைக்கின்றேன். இது தமிழ்நெட் 1999. இதில் குறைகள் இருந்தால் தமிழ்நெட் 2000த்தில் அவற்றைச் சரிசெய்துகொள்ளலாம் என்று கூறி, உங்கள் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து நாளை சந்திக்கிறேன். நாளைதான் சந்திக்கிறேன்.

நாளைதான் முக்கியமான நாள்.

முடிவுகள் எடுக்கப்படும் நாள்.

முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கும் நாள்

அந்த முடிவுகளை நிறைவேற்ற தமிழக அரசு என்ன செய்யுமென்று நான் அறிவிக்கவிருக்கும் நாள். கணிப்பொறியும் இணையமும் நமக்குத் தோழனாக, தொண்டனாக, அறிவு புகட்டும் ஆசானாக மாற்ற இன்றும் நாளையும் எடுக்கப்படும் முடிவுகள் உதவும் என்று கூறிக்கொள்கிறேன்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏற்றுக்கொண்ட தமிழ் வாழ்த்து

இங்கே தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் 
            சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்”

– என்ற தமிழ்த்தாய் வாழ்த்து. அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தை நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில்தான் அறிமுகப்படுத்தினேன். இப்போது உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள் தங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தாக இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய இந்த தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டொரு வரிகளைக்கூட நீக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், நம் மொழியை வாழ்த்துகின்ற நேரத்தில் பிற மொழியை இகழக் கூடாது என்பதற்காகத்தான். ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்துஎன்ற வரிகளை நீக்கிவிட்டோம். ஆரியம் உலக வழக்கு அழிந்து, ஒழிந்துவிட்டது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதற்காக அது சேர்க்கப்படவில்லை அதுமாத்திரமல்ல; மங்கல விழாக்களில் அழிந்து’, ‘ஒழிந்துஎன்ற சொற்கள் வேண்டாம் என்பதற்காகவும் அதை மாற்றியமைத்தோம். இன்று உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்த வாழ்த்து அமைந்திருக்கின்றது.

தமிழனாய் நிமிர்ந்தவர்கள் தலைநிமிர்ந்து கர்ச்சிக்க வேண்டும்.

பாரதியார் சொன்னார் 

சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் கலைச் 

செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!”

என்று சொன்னார். கலைச் செல்வம் என்றால் வெறும் கலை மாத்திரமல்ல; தொழிற்கலை, விஞ்ஞானக் கலை போன்றவைகள் எல்லாம்கூட அந்தக் கலைச் செல்வத்திலே அடங்கும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சல சலவென எவ்விடத்தும் பாய்ச்சி விட வேண்டும்!

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பல கழித்தோம்குறைகளைந்தோமில்லை.

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.

என்று பாடினார்

நான் தமிழன்;

எனது நாடு தமிழ்நாடு;

எனது மொழி தமிழ் மொழி;

தமிழ் மொழியாளர் எல்லாம் என் உறவினர்;

என் சமூகம் தமிழர் சமூகம்;

என் சாதி தமிழ்ச் சாதி;

தமிழர் நலமே என் மதம்;

என் கடமை தமிழ்நாட்டு ஊழியம் ;

என் தெய்வம் தமிழணங்கு;

என் மந்திரம் தமிழ்;

என் தோத்திரம் எந்தாய் வாழ்க!

– என்று தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தலை நிமிர்ந்து கர்ச்சிக்க வேண்டும் என்று கூறியவர் சுத்தானந்த பாரதியார்.

இவற்றையெல்லாம் இதயத்தில் பதிய வைத்துக்கொண்டு தமிழ் பரவிட, எனக்கு முன்னால் இங்கே சிறப்புரை ஆற்றியவர்கள் எல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல, எல்லாத் துறையிலும், தமிழைப் பயன்படுத்துகின்ற நல்வழியை, உற்ற வழியை, உரிய வழியை நாளைக்குக் காணுங்கள், கண்டு அறிவியுங்கள் என்று கேட்டு இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

- முத்தமிழறிஞர் கலைஞர்

  • Share this blog
  • instagram
  • facebook
  • linkedin
  • twitter

Uploaded By

Tamil virtual academy