Author Name
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
Published on
Sep 12 2025
‘புதியன விரும்பு’ என்பது பாரதி வாக்கு. அப்படியொரு புதுமை அரங்கேறும் வேளை இது. ஏறத்தாழ 75 ஆண்டுகள் அறைக்குள் முடங்கிக் கிடந்த புதையல்கள் பொதுவெளிக்கு வருகின்றன. பாரதியின் முத்து முத்தான, கலைநயம் மிக்க கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுத் தமிழிணைய மின்னூலகத்தில் பதிவேற்றம் பெறுகின்றன. இனி எல்லோரும் பாரதியின் கையெழுத்தைப் பார்த்து இன்புறலாம். கணினியில் சேமித்து, விரும்பும் வேளையில் படித்து மகிழலாம். பாரதி அன்பர்கள் இந்த அசல் படிகளை ஒப்புநோக்கி ஆய்வு செய்யலாம். பாரதி பற்றாளர்கள் படியெடுத்து இல்லம் தோறும் வரவேற்பறையில் நிழற்படமாக மாட்டி அழகு சேர்க்கலாம். பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும் என அன்றைய சென்னை மாகாண அரசு 1949 மார்ச் 12 அன்று அறிவித்தது. ’புவி மீது சாகாதிருப்பேன்’ எனக் கூறிய விவேகி பாரதியின் வாக்குப் பொய்க்காது என்பது மெய்ப்பிக்கப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாரதி பாடல்களின் உரிமத்தைப் பெற்றிருந்த ஏவி.மெய்யப்பன், பைசா பெறாமல் மனமுவந்து உரிமையை விட்டுக்கொடுத்தார். 1948இல் இவர் கோடம்பாக்கத்தில் படப்பிடிப்புத் தளத்தை உருவாக்க வாங்கிய 10 ஏக்கர் நிலத்தின் அன்றைய மதிப்பு 37,500 ரூபாய். ஆக, ஒப்பீட்டளவில் 10 ஆயிரம் பெருந்தொகைதான். இம்முயற்சியை வரவேற்று சி.விசுவநாதர் தம்வசமிருந்த தம் சகோதரர் சி.சுப்பிரமணிய பாரதியின் கையெழுத்துப் படிகளைக் காக்கும் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்தார். அதுவரை அகத்தினர் உடைமையாகவிருந்த பிரதிகள் ஆவணக் காப்பகத்தின் கட்டுக்குள் வந்தன. ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’ வசமிருந்த பாரதியின் கைப்பிரதிகளை மக்களின் பார்வைக்கு வைக்க அரசு ஒரு திட்டம் வகுத்தது. பொதுப் பார்வைக்கு வைப்பது எளிய காரியமன்று. காலப்போக்கில் அவை சிதிலமாகிவிடக்கூடும். காற்றுப்புகாத பேழைக்குள் அவற்றைப் பாதுகாப்பதோடு, ‘ஷிஃபான்’ முறையில் தரப்படுத்தி வைக்க வேண்டுமென ஒரு யோசனை அரசுக்குத் தோன்றியது. அதற்கான அறிவுறுத்தலின்படி அன்றைய ஆவணக் காப்பகக் காப்பாளர் பி.எஸ். பாலிகா (பந்த்வால் சுதேந்திரநாத் பாலிகா 1908-1958) பாரதியின் கைப்பிரதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கல்வி மற்றும் பொது சுகாதாரச் செயலாளர் ஜெ.எம். லோபோ பிரபு, ஐ.சி.எஸ்., அவர்களிடம் ஒரு கோரிக்கையை (22.10.1949) விடுத்தார். அதில், “தாங்கள் அறிவுறுத்தியபடி 5 ஆம் தேதி அருங்காட்சியகத்திலுள்ள கவி பாரதியின் கைப்பிரதிகளைப் பார்வையிட்டேன். எண்ணிக்கையில் அவை ஒரு டஜனுக்கு மேலானவை. ஒவ்வொன்றும் சுமார் 40 பக்கங்கள் உள்ளன. கறுப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறத்தால் எழுதப்பட்டுள்ளன. சில படிகள் தெளிவாக இல்லை. காகிதத்தின் தரம் மோசமாகவும் உள்ளது. சில சிதைந்துள்ளன. உடையுமளவு தாளின் தரமும் உள்ளது. ஆகவே, இவற்றுக்கு மறுசீரமைப்புத் தேவை’ எனக் கூறினார். பாரதியின் கையெழுத்துப் படிகளைப் பாதுகாக்க ‘ஷிஃபான்’ முறைப்படி செப்பமிட்டு, பச்சைநிறக் கெட்டி அட்டையிடுவது சிறந்ததென வழிமுறை வழங்கினார். மேலும், இம்முயற்சிக்கு பாரதியின் இளவல் சி.விசுவநாதரின் அனுமதியைக் கோரினார் பாலிகா. அதற்குப் பாரதி நிலையம், மானாமதுரை இல்லத்திலிருந்து பதிலுரைத்த (23.11.1949) விசுவநாதர், ‘பாரதியின் கையேடுகளைச் செப்பம் செய்யும் பணி குறித்துத் தமக்கேதும் ஆட்சேபம் இல்லை என்றும், ஏனெனில் புதையலைப் போன்று அவை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் தாம் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், பாரதியின் கையெழுத்துகள் பழுதுபடாது மறுசீரமைப்பு செய்யப்படுமென உறுதி அளித்துள்ளதால், இப்பரிந்துரையைச் செயல்படுத்தலாம் எனவும்’ இசைவு தெரிவித்திருந்தார். அரசின் ஆணையின்படி பாரதியின் கைச்சாத்துப் பிரதிகளை பி.எஸ். பாலிகா, சீர்மை செய்தவுடன் அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட அரசு ஒரு திட்டம் வகுத்துள்ளது பற்றி ‘தி இந்து’ (19.08.1949) செய்தி வெளியிட்டது. கறையான்களின் பசிக்கு இரையாகிவிடாமல், இவ்வளவு காலம் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருந்த பாரதியின் கையெழுத்துகள் இப்பொழுது முழுமையாக விடுதலை பெற்றுள்ளன. ஆய்வாளர்கள்கூட அணுக முடியாது பொத்திப் பொத்தி வைக்கப்பட்ட புதையல் கணினி யுகத்தின் நற்பலனாய்ப் பெருவாரியான மக்களிடம் போய்ச்சேரப் போகிறது. இனி, பாரதி ஆய்வாளர்கள் தங்களின் அரிய ஆய்வை மூலத்துடன் ஒப்புநோக்கி பல உண்மைகளை வெளிக்கொணரலாம். இந்த மூல ஆவணங்களை நெட்டோட்டமாக ஆய்ந்தவரை பல பாடல்களில் பாட பேதங்கள் புகுந்துள்ளன. பாரதி தன் கைப்பட ’செல்லம்மா’ என எழுதிய வரி அடித்தல் கண்டு, ‘கண்ணம்மா’ என மாறியுள்ளது. ராகம், தாளம் உள்ளிட்ட குறிப்புகள் செப்பமாகப் பதிப்பிக்கப்படவில்லை என அறிய முடிகிறது. இந்த ஒளிப்படிமத்திலுள்ள ‘சிட்டுக்குருவி’ கவிதையானது பாரதி கையெழுத்தன்று என்பது கவனம் கொள்ளப்பட வேண்டிய செய்தி. கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேலான மூல ஆவணங்கள் ஒளிப்படிமம் செய்யப்பட்டுள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்த ஏடுகள் பெருந்திரட்டுக்குள் சேர்ந்துள்ளன. இது ஓர் அசாதாரண முயற்சி. பாரதி பென்சிலால் தம் படைப்புகளை எழுதினாரென ’மகாகவி பாரதியார்’ நூலில் வ.ரா. குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிடைத்துள்ள கைப்பிரதிகள் முழுக்க மை எழுத்தால் படைக்கப்பட்டுள்ளன என்பது மெய்ப்படுகிறது. மேலும் 5, தேவராஜ முதலித் தெரு, மெட்ராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த எஸ். ஆழ்வார் தயாரித்த ‘நோட்டு’ புத்தகத்தைப் பாரதி பயன்படுத்தியுள்ளார். ஆக்ராவில் தயாரான சுதேசி ’நோட்’டிலும் எழுதியுள்ளார். ‘குயில்’ பாட்டை ஆக்ரா சுதேசித் தயாரிப்பான ‘நோட்டு’ புத்தகத்தில் (Agra Durga Pershad Daw Dyal shraisht, Munna lal Printer - Moon Press, Raja Mandi, Agra) படைத்துள்ளார். ’அக்நிஸ்தோமம் முதலிய பாடல்கள், ‘குயில்’, ‘சக்திப் பாடல்கள்’, ‘ஜகத் சித்திரம்’ (‘சுதேசமித்திரன்’ ஒளிநகல் உள்ளது), ‘பகவத் கீதை’ ‘சுப்பிரமணிய பாரதி இயற்றிய பாடல் கொத்து’, ’பாஞ்சாலி யோக சூத்திரம்’, ’சந்திரிகையின் கதை’ ‘விடுதலை’ ஆகிய பல ஏட்டுத் தொகுப்புகள் கைப்பிரதிகளாகக் கிடைத்துள்ளன. இவை யாவையும் பல கோடிப் பெறுமானம் கொண்டவை. கடந்த ஜூலை மாதம் (08.07.2025) கவி தாகூர் கைப்பட எழுதிய 14 உறைகளிட்ட 35 கடிதங்கள் விற்பனைக்கு வந்தன. அவை ரூ.5.9 கோடிக்கு ஏலம் போயின. தாகூர் அவர் நண்பரான சமூகவியலாளர் துர்ஜதி பிரசாத் முகர்ஜிக்கு விடுத்த மடல்கள்தாம் இவை. 1927 முதல் 1936 இடையேயான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. தாகூருக்கு நிகரான தேசியகவி பாரதி. தன் நூல்களைப் பதிப்பிக்க ’திரள் நிதி’யைத் திரட்டும் முன்மாதிரியான செயலைக் கைக்கொண்டவன். மாசம் 1க்கு ரூபாய்க்கு 2 வீதம் வட்டி தருமளவு நெஞ்சுரம் பெற்றிருந்தவன். அவனது அரிய கையெழுத்து ஆவணங்கள் நிரம்பிய படைப்புகளை, தமிழ்நாடு அரசு இன்று விலைகூற முடியாத சொத்தாக வெளியிடுகிறது. இது எத்தனை ஆண்டுகாலக் கனவு? அரசின் இந்த நன்முயற்சி பாரதி இயல் வரலாற்றுக்குப் பொற்காலம். வரும் தலைமுறை இந்நாளைப் பொன் எழுத்துகளால் பொறிக்கும்.
பாரதியின் கையெத்துப்பிரதிகளைக் காண இங்கே சுட்டுக.
-கட்டுரையாளர், கோட்டுச் சித்திரம் - K.M. ஆதிமூலம் |