Author Name
சே.பச்சைமால் கண்ணன்
Published on
Feb 20 2026
|
தென்கலைச் செல்வர் (தட்சிணக் கலாநிதி), பெரும் பேராசிரியர் (மகாமகோபாத்தியாய) என்னும் பட்டங்களைப் பெற்றவர் உ.வே. சாமிநாதையர். அவரை இன்று தமிழ்த் தாத்தா என்று அழைக்கின்றனர். நாம் தமிழ்ப் பாட்டன் என்றே சொல்லலாம். உ.வே. சாமிநாதையர் சிறந்த தமிழ்ப் பற்றாளராக விளங்கினார். தமிழ்நாட்டில் ஆசிரியர், பேராசிரியர் ஆகியோரின் புலமைக்குச் சான்றளிப்பவராகத் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் மன்னர்களின் அரண்மனைகளிலும், சைவ வைணவ மடங்களிலும், வறுமைக்குள்ளான புலவர்களின் மரபினரிடமும் இருந்த தமிழ் இலக்கியங்களைக் கொண்ட ஓலைச்சுவடிகள் செல்லரித்தும், தீக்கிரையாகியும், ஆற்றுவெள்ளத்தில் இடப்பட்டும் அழிவதைக் கண்டு அவர் உள்ளம் வாடியது. அதனால் அழியும் நிலையில் இருந்த ஓலைச்சுவடிகளை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்துப் படியெடுத்ததுடன், அவற்றை அச்சிற்பதிப்பித்து நூலாகக் கொண்டுவந்தார். எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பமான அச்சுப்பொறி உதவியுடன் அவற்றை மரக்கூழால் செய்த தாளில் அச்சிற்பதிப்பித்த அரிய பணியைச் செய்த பெருமைக்குரியவர் அவர். அவரின் அருமுயற்சியால்தான் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு எனச் சங்க இலக்கிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அதனால் அவரைத் தமிழ்ப் பாட்டன் என்று அழைப்பது மிகப் பொருத்தமாகும். உத்தமதானபுரம் வேங்கட சுப்பையரின் மகனாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1855ஆம் ஆண்டு பிப்பிரவரி 19ஆம் நாள் பிறந்த சாமிநாதையர் 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் தமது 87ஆம் அகவையில் காலமானார். திருவாவடுதுறை ஆதீனத் தமிழ்ப் பள்ளியில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்று கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி எண்ணற்ற மாணவர்கள் அறிவு விளக்கம் பெறுவதற்கு விளக்காகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர் உ.வே. சா. அந்நாளில் அவரின் கட்டுரைகள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் கற்றுத் தேறியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கான வினாத்தாள்களை அவர் உருவாக்கியுள்ளார். தெற்கே திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கே மங்களூர் வரையும் வடகிழக்கே புவனேசுவரம் வரைக்கும் அந்நாளில் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் பலரும் வியந்த மதித்த பெரும்பேராசிரியராக உ.வே.சா. விளங்கினார். அது மட்டுமல்லாமல் இலங்கை, பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அவர் பதிப்பிக்கும் நூல்களைப் படித்து இன்புறும் தமிழார்வலர்கள் இருந்தனர். உ.வே.சாமிநாதையர் மடல்கள் என்னும் தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 1877ஆம் ஆண்டு முதல் அவர் காலம் வரை எழுதப்பட்ட இரண்டாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அவருக்குக் கல்வியாளர்களும், குறுநில மன்னர்களும், தமிழார்வலர்களும் எழுதியவை. அந்நாளில் தமிழ்நாட்டில் பெரும் கல்வியாளர்களாக விளங்கிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற் கலைஞர், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், சுத்தானந்த பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், இராமநாதபுரம் மன்னர், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர், அரியலூர்ப் பண்ணையார், சேற்றூர், சிவகிரி, ஊற்றுமலை, சிங்கம்பட்டி பண்ணையார்கள், கவிராயர்கள், மடங்களில் தலைமையேற்றிருந்த தம்பிரான்கள், இலங்கைத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், அந்நாளில் நீதிமன்றங்களில் கோலோச்சிய நயன்மையாளர்கள் எழுதிய மடல்களும் உள்ளன. ஐயரின் மாணவராகத் தமிழ்படித்துப் பின்னாளில் சென்னை மாகாணத் தலைமை அமைச்சராக உயர்ந்த சுப்பராயன், ஆங்கிலேயராட்சியில் மத்தியச் சட்டமன்றத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் அரசால் இந்தி திணிக்கப்பட இருந்தது குறித்து ஐயரின் கருத்தறிய விரும்பி எழுதிய மடலும் இந்தத் தொகுப்பில் உள்ளது. உ.வே.சாமிநாதையரின் மகன் கல்யாணசுந்தரம் ஐயருக்குப் பிறர் எழுதிய மடல்கள், உ.வே.சாமிநாதையர் தம் நண்பர்களுக்கும் தமிழ்ச் சங்கத்தாருக்கும் எழுதிய மடல்கள் ஆகியனவும் இந்தத் தொகுப்பில் உள்ளன. இவற்றை வெறும் மடல்கள் என்று கருதிவிட முடியாது. அந்நாளில் நிலவிய கல்வி, சமூக, பொருளாதாரச் சூழலை நாம் அறிந்துகொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகளாக இவை உள்ளன. தனக்குக் கல்வி பயிற்றுவித்த பெருமதிப்புக்குரிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் மனைவி காவேரியம்மாளுக்கு உ.வே.சாமிநாதையர் எழுதிய மடல்களில் இருந்து அவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஐயர் பணம் அனுப்பியுள்ளது தெரியவருகிறது. இதேபோல் ஐயரின் 75ஆம் ஆண்டு விழா, 80ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றதும், அவ்விழாக்களைக் குழு அமைத்து நடத்தியதும் அதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பொருளுதவி செய்திருப்பதும் இந்த மடல்களின் வாயிலாகத் தெரியவரும் செய்திகள். அந்நாளில் கல்வியிற் சிறந்த பெரியோர் சங்க இலக்கியப் பாடல்களில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு விளக்கம் வேண்டி ஐயருக்கு மடல்கள் எழுதியுள்ளனர். அவற்றுக்குப் பெரும்பாலும் விடையிறுத்து மடல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அன்றைய சென்னை மாகாணத்திலும் இலங்கையிலும், திருவிதாங்கூர், கொச்சி நாடுகளிலும், மைசூரிலும் பள்ளி கல்லூரிகள், தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்க ஐயரை அழைத்து மடல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுக்கு அவர் பதில் எழுதியுள்ளார். பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மதுரைத் தமிழ்ச்சங்கம், இராமநாதபுரம் அரண்மனை ஆகியவற்றுடன் மிக நெருங்கிய நல்லுறவை ஐயர் பேணி வந்துள்ளார். அந்நாளில் ஆசிரியப் பணியில் கிடைத்த ஊதியம், மன்னர்கள், வணிகர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரிடம் கிடைத்த பொருளுதவி ஆகியவற்றைக் கொண்டு சங்கத் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பணியைத் தளராமல் செய்துள்ளார் ஐயர். இது இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான மடல்களில் கிடைக்கும் செய்தியாகும். 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு உருவானது. அதற்கு முன் எங்கெல்லாம் தமிழ் வழங்கியது, தமிழ் எவ்வாறு சிறப்புற்றிருந்தது என்பதை அறிய உ.வே.சாமிநாதையர் மடல்கள் மிகச் சிறந்த சான்றாக விளங்குகின்றன. இன்று ஒருவர் கற்ற கல்விக்கும் அவரின் மொழிப் புலமைக்கும் சான்றளிக்கப் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஐயர் வாழ்ந்த பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் தென்னகத்திலேயே ஒரேயொரு பல்கலைக்கழகம்தான் இருந்தது. அது சென்னைப் பல்கலைக்கழகம். அதன்கீழ் இன்றைய தமிழ்நாடு உட்பட அன்றைய சென்னை மாகாணத்தின் பகுதிகள் இருந்தன. திருவிதாங்கூர், கொச்சி, மலபார், கொங்கணம், கருநாடகம், ஆந்திரம், தெலங்கானம், கலிங்கம் என அதன் பரப்பல் விரிந்திருந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர் பணிக்கு ஆளெடுத்தபோது உ.வே.சாமிநாதையரிடம் புலமைக்கான சான்று பெற்றிருந்தவர்களைத் தேர்வுசெய்தனர். இதற்காக அவரிடம் பரிந்துரைச் சான்று பெற வேண்டிப் பலர் எழுதிய மடல்களும் உள்ளன. சிறந்த பாக்களையும் நூல்களையும் எழுதியோர் அவற்றை வெளியிடுமுன் ஐயரின் பார்வைக்கு அனுப்பிப் படித்துத் திருத்தவும், அந்நூலைப் பாராட்டி ஒரு சாற்றுக்கவி எழுதவும் வேண்டி எழுதிய மடல்களும் உள்ளன. படித்தவர், நயன்மையாளர், கல்வியாளர், பண்ணையார், மன்னர், ஆசிரியர், பேராசிரியர் என மடல்கள் எழுதிய அனைவரும் உ.வே.சாமிநாதையர் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தது அவர்களின் மடல்கள் வாயிலாகத் தெரிய வருகிறது. அந்நாளில் கல்வியறிவு பெற்றிருந்தோர் மட்டுமே ஐயருக்கு மடல்கள் எழுதியதாகக் கருத முடியாது. இருப்பினும், ஐயருக்கு மடல்கள் எழுதியவர்களைக் கொண்டு எந்தெந்தச் சமூகத்தினரில் எவ்வளவுபேர் படித்திருக்கக் கூடும் என்று சமூகத்தின் கல்வி மதிப்பீடும் செய்ய முடிகிறது. கணினி இல்லாத அக்காலத்தில் ஒரு நூலைப் பதிப்பிக்க ஓலைச்சுவடியைப் படித்து, அதில் இல்லாத பகுதியை மற்றொரு சுவடியில் படித்து எழுதிக்கொண்டு அச்சுக்கோத்து அச்சிட்ட தாள்களை நூல்களாகக் கட்டி அஞ்சல் வழியாக அனுப்பிவைப்பது என்று ஒரு பதிப்பகத்தாரின் பணி எத்தகையதாக இருந்திருக்கும் என்பதையும், அதற்குரிய பணத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் அனுப்பினர் என்பதையும் இந்தத் தொகுப்பில் உள்ள பல மடல்களின் வாயிலாக உணர முடிகிறது. ஓலைச்சுவடிகளில் உறங்கிக் கிடந்த தமிழ் இலக்கியப் புதையல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்துத் தாளில் அச்சிட்டுத் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெல்லாம் தமிழ்மணம் கமழச் செய்தவர் உ.வே.சாமிநாதையர். செல்பேசி, மின்னஞ்சல், விரைவான போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்திலேயே அவர் தமிழ்நாட்டில் உள்ளோரை அஞ்சல் வழியே எவ்வாறு தொடர்புகொண்டுள்ளார்? ஓலைச்சுவடிகளை வாங்க எங்கெல்லாம் நடந்துள்ளார்? நூலை அச்சிட்டபின் மூலநூலான ஓலைச்சுவடியை எப்படித் திருப்பிக் கொடுத்துள்ளார்? என்கிற நிகழ்வுகளெல்லாம் இந்த மடல்களைப் படிக்கும்போது நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன. ஐயருடன் நாமும் உலவுவது போலும், ஐயர் பேராசிரியராக இருந்த கல்லூரியில் எதிரில் அமர்ந்து நாம் கல்வி கற்பது போலவும் மெய்ந்நிகர் உணர்வு இந்த மடல்களைப் படிக்கும்போது நம் ஒவ்வொருவரின் மனத்திலும் தோன்றும். கிடைத்தற்கரிய கருவூலமான இந்தத் தொகுப்பு தமிழருக்கான பெருஞ்செல்வமாகும். |