கல்வெட்டு
கீழவளவு
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கீழவளவு
ஊர் கீழவளவு
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் பஞ்சபாண்டவர் மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மதுரையிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் கீழவளவு என்ற இவ்வூர் உள்ளது. இவ்வூருக்குச் சற்று முன்பாகவே குன்று ஒன்றுள்ளது. இக்குன்றின் அடிவாரத்திலும் நடுவிலும் இயற்கையான குகைத்தளங்கள் உள்ளன. இவற்றில் வழவழப்பாகத் தேய்த்து உருவாக்கப்பட்ட கற்படுக்கைகள் பல உள்ளன. பஞ்சபாண்டவர் மலை என்றும் பள்ளி என்றும் அழைக்கப்படும் குன்றின் நடுவில் உள்ளவொரு குகைத்தளத்தின் முகப்புப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் கீழாக தமிழ் - பிராமிக் கல்வெட்டொன்று காணப்படுகின்றது. இக்கல்வெட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டில் வெங்கோபராவால் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டும் குகைத்தளமும் சமணச் சிற்பங்களும் இந்திய அரசு தொல்லியல் துறையால் மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இக்கல்வெட்டில் சில எழுத்துக்கள் நேராகவும் சில எழுத்துக்கள் தலைகீழாகவும் சில எழுத்துக்கள் இடம் வலமாகவும் ஒரே வரியில் மாறி மாறி வெட்டப்பட்டுள்ளன. கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். உபசன் தொண்டி (இல்)லவோன் கொடுத்த பள்ளி என இக்கல்வெட்டு பொருள்படுகிறது. ‘உபஜ்ஜாயா’ என்ற பாலி மொழிச் சொல்லிலிருந்து உப(ச)ன் என்ற சொல் உருவாகியிருக்கலாம். 'உபசன்’ என்ற சொல்லுக்குச் ‘சமய ஆசிரியர்’ என்று பொருள். இவர்கள் சமணப் பள்ளிகளிலும் சமண சமயத்தவரின் இல்லங்களில் நடைபெற்ற விழாக்களிலும் சமயப்பணி புரிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். உபாசித்தல் என்பதற்கு வழிபடுதல் என்று பொருள். எனவே உபாசனை வழிபாடு தொடர்பான பணி செய்தவர்கள் ‘உபாசகன்’ என்றழைக்கப்பட்டார்கள் எனலாம். 'உபசஅன்' என்ற சொல் கொங்கர் புளியங்குளம் கல்வெட்டிலும் திருவாதவூர் கல்வெட்டிலும் கூடக் காணப்படுவது இங்கு ஒப்பு நோக்கற்குரியது. பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தொண்டி கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே அதே பெயரில் இருந்திருப்பதை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது. சங்க இலக்கியமான குறுந்தொகையில் 210 ஆவது பாடலிலும் 238 ஆவது பாடலிலும் குறிப்பிடப்படும் தொண்டியைப் பாண்டிய நாட்டுத் தொண்டியாகக் கருதுவர். கீழவளவுக்கு அருளிலுள்ள மேலூருக்கும் தொண்டிக்கு இடையிலான நெடுஞ்சாலை பழைய வழித்தடத்தை ஒட்டியே அமைக்கப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது. மேற்குக் கடற்கரையில் சேரருக்குரியதாகவும் தொண்டி என்ற ஒரு துறைமுகம் இருந்துள்ளது. இத்தொண்டியைச் சங்க இலக்கியங்கள் ‘பொறையன் தொண்டி' (நற்றிணை 8; 9-10, குறுந்தொகை 128; 1-3 அகநானூறு 60.87) எனச் சுட்டுகின்றன. இதனைக் ‘குட்டுவன் தொண்டி’ எனவும் குறிப்பர் (ஐங்குறுநூறு 178). 'பளிஇ’ என்ற சொல்லைப் ‘பள்ளி’ என்ற சொல்லாகக் கொண்டு ‘முனிவராசிரமம்’ எனப் பொருள் கொள்ளலாம். ‘மாதவர் பள்ளி’ என்ற சொல்லாட்சி மணிமேகலையிலிருப்பதும் (18,8) இங்கு ஒப்பு நோக்கற்குரியது. தமிழ்-பிராமி கல்வெட்டுகள் உள்ள குகைத்தளத்தின் வலப்புறப் பகுதியின் முகப்புப் பாறையில் 6 சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. இவற்றின் மீது தீட்டப்பட்ட வண்ண ஒவியங்கள் அங்கங்குச் சிறிதளவு தெரிகின்றன. இச்சிற்பங்கள் ஏறத்தாழ கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எனவே இவ்விடம் தொடர்ந்து சமணப் பள்ளியாக ஒன்பதாம் நூற்றாண்டுவரை இருந்தது தெளிவு.
குறிப்புதவிகள்
கீழவளவு
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 262
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு