MARC காட்சி

Back
அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில்
245 : _ _ |a அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் -
246 : _ _ |a இருந்தையூர், திருக்கூடல், நியமம், வெள்ளை நகரம், நான்மாடக்கூடல்
520 : _ _ |a மதுரை நகரின் முக்கிய வைணவ வழிபாட்டுத் தலம் கூடலழகர் பெருமாள் கோவிலாகும். இது கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசு காலத்தில் கட்டப்பட்டது எனப்படுகிறது. இக்கோவிலிலுள்ள அஷ்டாங்க விமானம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அடித்தளத்தில் மூலவரான கூடலழகர் வீற்றிருந்த திருக்கோலத்திலும், இரண்டாவது தளத்தில் பெருமாள் சூரிய நாராயணனாக நின்ற கோலத்திலும், மூன்றாவது தளத்தில் பெருமாள் க்ஷீராப்தி நாதனாகப் பள்ளி கொண்ட கோலத்திலும் காட்சி தருகிறார். ஒரே கோவிலில் மூன்று கருவறைகளை, ஒன்றன்மேல் ஒன்றாகக்கொண்டு மூன்று திருக்கோலங்களில் பெருமாள் காணப்படுவது சிறப்பான ஒன்றாகும். இதுபோன்ற விமான அமைப்பு தமிழ்நாட்டில் திருக்கோஷ்டியூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலுள்ள வைணவ ஆலயங்களில் உள்ளன. இந்த அஷ்டாங்க விமானம் ஓர் அரிய கலைப்படைப்பாகும். விமானத்தின் சுவர்களில் காணப்படும் சாளரங்கள் மற்றும் இதர சிற்பப் படைப்புகள் போற்றத்தக்கவை. மதுரவல்லித் தாயாரின் சந்நிதியிலுள்ள கற்றூண்களும், இசைத்தூண்களும் வேலைப்பாடு மிக்கவை.திருக்கூடல் என்னும் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் “அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட மழைப்பேரருவி மணிவரன்றி வந்திழிய யானை வெருவி யரவொடுங்கும் வெற்ப“ (2420) நான்முகன் திருவந்தாதி – 39 என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது. இக்கூடல் என்னும் திவ்ய தேசம், நான் மாடக்கூடல் என்றும், மூதூர் என்றும் தண்டமிழ் இலக்கியங்கள் போற்றும் நம் மதுரை மாநகரமேயாகும். இந்நகரம் இந்தியாவின் தலைசிறந்த நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை நகரின் மையப் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இத்தலம் அமைந்துள்ளது. தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் “திரிவேணி சங்கமம்” ஆயிற்று. தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில்பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும் சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும் சேருமிடம் முக்கூடல் ஆயிற்று. முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே. இஃதே போன்று “கிருதமாலா” என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று. இக்கூடல் மாநகரில் கோவிந்தனின் சாநித்தியம் ஏற்பட்டதால் ‘’திருக்கூடல்” ஆயிற்று. திருமங்கையாழ்வாராலும், திருமழிசையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். பெரியாழ்வார் இம்மதுரையில் பல்லாண்டு பாடியதால் திருப்பல்லாண்டால் இப்பெருமானையும் மங்களாசாசனம் செய்தாரென்பர். மணவாள மாமுனிகள் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். கி.பி. 1307இல் திருவாய் மொழிப் பிள்ளை என்ற ஆசிரியர் மதுரைக்கு அருகே உள்ள குந்தி நகரத்தில் (கொந்தகை) அவதரித்தார். இவர் பாண்டி நாட்டின் முதலமைச்சராய் இருந்தவர். முஸ்லீம்களின் படையெடுப்பின் போது இத்தலத்திற்கு எவ்வித ஊரும் நேராவண்ணம் பாதுகாத்துவந்தவர். இவரது சீடரே மணவாள மாமுனிகளாவர். இராமானுஜரால் இத்தலம் பெரிதும் உவப்பாக பேசப்பட்டுள்ளது. பல்லாண்டு பாடப்பட்ட ஸ்தலமாதலால் இதனை பரமபதத்திற்கு ஈடாக அவர் கருதினார். பாண்டிநாட்டுத் தலங்களில் பெருமாள் மாடி வீட்டில் குடிகொண்டுள்ளார் என்று கூறுவதற்கொப்ப இத்தலம் 3 அடுக்குகளாலானது. முதல் அடுக்கில் (தளத்தில்) வீற்றிருந்த திருக்கோலத்தில் வீயூக சுந்தரராசன் என்ற பெயரில் அமர்ந்துள்ளார். 2வது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளுகிறார். நவக்கிரகங்களும் இந்தக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இதன் மற்றோர் சிறப்பம்சமாகும். ஒரு சமயம் பூமியெங்கும் பெருமழை பொழிய மழை நிற்பதற்கான அறிகுறிகள் யாதும் தென்படாத நிலையில் பக்தர்கள் மழை நிற்க வேண்டுமென்று இப்பெருமானைப் பிரார்த்திக்க, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்ற பகவான் நான்கு மேகங்களை ஏவ, அவை மாடங்கள் போல் ஒன்று கூடி மழையைத் தடுத்தமையால் இந்நகருக்கு “நான் மாடக்கூடல்” என்று பெயருண்டாயிற்று என்பர். வைகானஸ ஆகமம் என்ற ஆராதனைக் கிரம முறைக்கு உட்பட்டது இத்தலம்.சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்டு (அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது. இவ்விமானத்தை 48 நாட்கள் தொடர்ந்து தினமும் பன்னிரு முறை சுற்றினால் எண்ணியகாரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்,“கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ என்ற பாடலில் தாமிரபரணியாற்றங்கரையிலும் கிருதமாலா நதி தீரத்திலும் பெரும் பேருடன் விளங்கி வைணவத்தை ஸ்தாபிக்கும் மஹான்கள் அவதரிக்கப்போகிறார்கள் என்று சொன்னாற்போல் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரும், கிருதமாலாவில் பெரியாழ்வாரும் பிரேவேசித்தார்கள். ஒரு வகையில் ஸ்ரீ ரங்கத்தைப் போல இத்திருத்தலம் இரண்டு நதிகளுக்கு இடைப்பட்டதாகும். அரங்கம் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்டது. கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடைப்பட்டது. ஆகமங்களில் கூறியுள்ள முறை வழுவாத அர்ச்சாரூபியே இங்கு எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ஆர்ஷிதம் என்ற வகைக்குட்பட்டதாகும். இங்கு இருக்கும் ஆண்டாள் திருச்சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். தம் தகப்பனாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாதலால் தனது தனிப்பெருமானை மகள் நிலைநாட்டிக் கொள்வதில் தடை என்ன இருக்க முடியும். இந்த மதுரையில் ஒரு காலத்தில் வைணவம் தழைத்தோங்கி இருந்தது. இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.“உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்” மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய திருமாலின் கோவிலும், மேழிவலவன் - பலராமனின் கோவிலுமிருந்த வெள்ளை நகரம் - அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும் சிறப்பிக்கப்படுகிறது. பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தசபை இருந்த இடத்தை மெய்காட்டும் பொட்டல் என்பர். அதுவே இன்று மேங்காட்டுப்பொட்டலாயிற்று. இதனால் இன்றும் மாழ்கழி மாதத்தில் பகற்பத்து முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார். பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் விஷ்ணு மூன்று நிலைகளில் காட்சியளிக்கிறார். அதில் பிரசித்தமானது அமர்ந்த நிலையில் உள்ள கூடல் அழகர் மேலும் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர் ,முழு உருவில் உள்ள ஸ்ரீ சூர்ய நாராயண பெருமாள்.
653 : _ _ |a மதுரை, கூடலழகர் பெருமாள் கோயில், பெரியாழ்வார், கிருதமாலா நதி, பல்லாண்டு, அஷ்டாங்க விமானம், சுந்தரராஜப் பெருமாள், மதுரவல்லி நாச்சியார், 108-திவ்வியதேசம், மங்களாசாசனம்
700 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
902 : _ _ |a 0452-2338542
905 : _ _ |a கி.பி.9-15-ஆம் நூற்றாண்டு / பாண்டியர் விஜயநகர, நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 2000 ஆண்டுகள் பழமையானது. சங்க இலக்கியப் பாடல் பெற்றது. பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றது. 108- வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். அஷ்டாங்க விமானம் என்னும் திராவிடக் கட்டடக் கலைப் பாணியைக் கொண்டுள்ளது. பாண்டியர், விசயநகரர், நாயக்கர் கால திருப்பணிகளைப் பெற்றுள்ளது.சங்க காலத்திய பாண்டிய மன்னனான தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான். ஆவணித் திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள் செய்தான். அதனை “மாயோன் மேய ஓண நன்னாள்” என்று தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுகிறார். துவரைக் கோமான் என்ற பெயரில் கூடழலகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார் என்றும் கூறுவர். கூடல் அழகர் என்ற இச்சொல்லைத்தான் “வ்யூக சுந்தரராஜன்” என்று வடநூலார் மொழியாக்கஞ் சங்க காலத்தில் இப்பெருமானுக்கு “இருந்த வளமுடையார்’ என்ற திருநாமம் இருந்தது. கூடழலகர் இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்தல மென்பதால் சிலப்பதிகார அரும்பதவுரைகாரரும் இருந்த வளமுடையார் என்றே இப்பெருமானுக்கு பெயர் சூட்டியுள்ளார். பரிபாடலில், “வானார் எழிலி மழைவளம் நந்தத் தேனார் சிமய மலையின் இழி தந்து நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய இருந்தையூர் அமர்ந்த செல்வாநின் திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”என்ற அடிகளில் இருந்தையூர் அமர்ந்த செல்வா என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலமிருந்த பகுதி இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் தமிழ்ப் புலவர் இருந்தமையை நக்கீரனின் இறையனார் களவியல் உரை பேசிப் போகிறது. கூடலழகரை வேண்டிப் பேறு பெற்றவர்களை “வில்லாண்ட வடவரையான் மணம் புணர அட்டாங்க விமான மென்னும் இல்லாண்டு புயன் கனகன் காசிபனார் பிருகு அம்பரீடன் கூடல் தொல்லாண்ட புருரவசு மலயகேதனன் முதலலோர் தொழப் புத்தூரான் பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோளனடி பணிதல் செய்வாம்“ என்ற பாடலால் தெரியலாம். பெரியாழ்வார் திருமாலே பரமபதம் அளிக்கும் சக்தி வாய்ந்தவர் என்று பரதத்துவ நிர்ணயம் செய்ததை பாண்டியன் கொண்டாட என்ற பாடலால் அறியலாம். வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும் உண்டு. விண்ணின்று வையம்நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர் பெற்றதென்பர். இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும். வேகமாதலின் வேகவதி என்றும் மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் – தார் ஆகலால் கிருதமலையதாம் என்றும் நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு செப்புகிறது. சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப் பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் என்பதை, ”ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும் நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத் தூவித் துறை படியப் போயினாள்” என்று இளங்கோவடிகள் பகர்கிறார்.
914 : _ _ |a 9.914296
915 : _ _ |a 78.1135012
916 : _ _ |a கூடல் அழகர், இருந்தையூர் செல்வன், கூடலழகப் பெருமாள்
917 : _ _ |a வ்யூக சுந்தரராஜப்பெருமாள்
918 : _ _ |a மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி
923 : _ _ |a கிருதமாலா நதி, ஹேமபுஷ்கரிணி
925 : _ _ |a விச்வரூபம், பொங்கல் காலம், சாயரட்சை, உச்சிகாலம், நித்திய அனு சந்தான கோஷ்டி, சம்பாக்காலம்
926 : _ _ |a வைகாசிப் பெருவிழா, தைலக்காப்பு, பகல் பத்து, இராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கனு விழா, பங்குனி திருக்கல்யாண உற்சவம்
927 : _ _ |a மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்யப்பட்டது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் 557,558,559, நாயக்க மன்னர்களின் திருப்பணியைப் பற்றித் தெரிவிக்கிறது.
928 : _ _ |a இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய் எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால் தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
929 : _ _ |a அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப் பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. மேலும் கோபுரத்தில் விபீடணனுக்கு இராமர் பட்டாபிடேகம் செய்யும் காட்சியும், இராமர் பட்டாபிடேகக் காட்சியும் உள்ளன. கோயிலைக் காண்போர் முதலில் நல்லதைக் காண வேண்டும் என்ற நிலையில் பட்டாபிடேகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
930 : _ _ |a இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணம், கூடற் புராணம் போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு யுகங்களிலும் இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது. கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார் போல ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க எம்பெருமானும் பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினர். இதே யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட இத்தலத்தே தவமிருந்து இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை மணம் புரிந்தார். திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத் தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது பறக்கும் போதும் அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின் திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி பரமபதம் அடைந்தான். துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய அம்பரிஷன் மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான். கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக் கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான். அவனது மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே தொண்டூழியம் செய்து உய்ந்து போனான். இவனது புத்திரனே மலயத்துவசப் பாண்டியன் என்பவன். இவனே வடநாட்டு வேந்தர்களை வென்று இமயமலைமீது மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையும் பதித்துத் திரும்பினான். இவனைத்தான் பெரியாழ்வார், “பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்” என்கிறார். இதே கலியுகத்தில் நீண்ட வருடங்கட்குப் பிறகு “வல்லபதேவன்” என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது “முக்தியளிக்கும் தெய்வம் எது’. என்று சந்தேகம் கொண்டு தன் தேசத்திலிருந்த பல மதத்தார்களையும் முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு கோரி அதற்குப் பரிசாக பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய மதம் முக்தியளிக்கும் என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது இந்தப் பொற்கிழி தானாகவே அறுந்துவிழும் என்றும், இதனை யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான். இதைக் கேள்வியுற்ற ஒவ்வொரு மதாபிமானியும் தத்தம் மதமே சிறந்ததென்று வாதிட்டு வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே இருக்கும் பெரியாழ்வாரை விழிமின். அவர் வந்து திருமாலே பரம்பொருள், வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ நிர்ணயம் செய்வாரென்று கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க அவரும் இக்கூடல் நகருக்கு எழுந்தருளினார். சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள், மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல மதம் எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது. இதைக்கண்டு பேராச்சர்யமுற்ற பாண்டியன் பெரியாழ்வாரையும் பணிந்து போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து ஊர்வலமாய் அழைத்து வரலானான். இக்காட்சியைக் காண கூடலழகரே பிராட்டியோடு கருட வாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார். இக்காட்சியைக் கண்ட ஆழ்வார், பெருமாளே கலியுகத்தில் நீ இவ்விதம் காட்சி தருவதோ, நின் அழகுக்கு கண்ணேறு பட்டுவிடாதோ என்று நினைத்து எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார். இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக அமைந்துவிட்டது. திருமால் “திரிவிக்ரம” அவதாரம் எடுக்கும் போது வளர்ந்த அவரது ஒரு பாதம் சத்திய லோகம் வரை செல்ல, பிரம்மன் அக்கமல பாதங்களை தனது கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அலம்ப அதனின்றும் தெரித்த நீர்த்துளிகள் இவ்வையத்தில் வீழ்ந்து புனிதமாக்கியது. அதுவே இவ்வையத்தில்(வைகை) ஆனது. இவ்வையை இருகூறு ஆகப் பிரிந்து மதுரை நகருக்கு மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு கிருதமால் எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில் இப்பெருமாள் எழுந்தருளினார். இங்கு விழுந்ததைப் போலவே திருமாலிருஞ்சோலையில் விழுந்த ஒரு நீர்த்துளிதான் சிலம்பாறு ஆயிற்று. வையை இருபெரும் பிரிவாய் பிரிந்து ஓடியமைக்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம். முன்னொரு யுகத்தில் சத்திய விரதன் என்னும் பாண்டியன் கூடல் அழகர்பால் மிக்க அன்புகொண்டு திருவாராதன தீர்த்தம் மட்டும் பருகி கடும் விரதம் மேற்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்தி வேளையில் ஜலதர்ப்பணம் செய்கையில் அவன் அஞ்சலி செய்யும் நீரில் மீனுருவமாக (மச்சாவதாரமாய்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார், என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. எனவேதான் பாண்டிய மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்தி பூண்டது மட்டுமன்றி தமது கொடிகளிலும் மீன் உருவத்தையே தங்கள் சின்னமாய் பொறிக்கலாயினர். கூடற் புராணம் என்னும் நூல் இருந்தையூர் கோயிலில் உள்ள கூடலழகர் பெருமாள் மீது பாடப்பட்டது. இதனை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. எனினும் 16-ஆம் நூற்றாண்டு புரூரவ சரிதை நூலிலுள்ள சில புதிய கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருத்தலையும், நூலிலுள்ள பாடல் நடையையும் கருத்தில் கொண்டு இந்தக் கூடற்புராணம் 16-ஆம் நூற்றாண்டு நூல் எனக் கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து காண்டங்களைக் கொண்டது. முதல் காண்டம் பாயிரம். ஏனைய நான்கும் கிரேத காண்டம், திரேத காண்டம், துவாபர காண்டம், கலி காண்டம் என்று யுகங்களின் பெயரைக் கொண்டுள்ளன. 757 விருத்தங்களைக் கொண்டது. இக்கூடற்புராணத்தில் திருமாலின் 10 அவதாரம், 12 ஆழ்வார்கள் போற்றப்படுகின்றனர். ஆற்றுப்படைப் படலம், நாட்டுப்படலம் முதலான பல படலப் பிரிவுகளும் இதில் உள்ளன. நம்மாழ்வார் 17 அடி கொண்ட ஆசிரியப்பா ஒன்றை மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பினார். அதன் பொருளைக் காணமுடியாமல் சங்கத்தார் திகைத்தனர். நம்மாழ்வார் விளக்கினார் மேலும் காசிபனுக்கு மக்கள் வரம் தந்த திருமால் அவனுக்கு ‘அலைவின்மை’ வரமும் அருளினார் போன்ற செய்திகள் இக்கூடற் புராணத்தில் இடம் பெற்றுள்ளன.
932 : _ _ |a பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திராவிடக் கட்டடக்கலை மரபுடன் கூடியது. எண்பட்டை சிகரத்தைக் கொண்ட விமானமே அட்டாங்க விமானமாகும். 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. இந்த விமானம் 125 அடி உயரமும், இதிலுள்ள கலசம் 10 அடி உயரமும் உடையது. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கிறது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a மீனாட்சியம்மன் கோயில், மதனகோபாலசுவாமி கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், வடக்கு கிருஷ்ணன் கோயில், படித்துறை அனுமார் கோயில், செல்லத்தம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில்
935 : _ _ |a மதுரை நகரின் மையப் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இத்தலம் அமைந்துள்ளது. தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
937 : _ _ |a பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000104
barcode : TVA_TEM_000104
book category : வைணவம்
cover images TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_மகாமண்டபம்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_இராஜகோபுரம்-0001.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_மகாமண்டபம்-0002.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_தென்புற-நுழைவாயில்-0003.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_வடபுற-கோட்டம்-0004.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_அரைத்தூண்கள்-அமைப்பு-0005.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_கருவறை-விமானம்-அமைப்பு-0006.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_கருவறை-விமானம்-ஸ்தூபி-0007.jpg

TVA_TEM_000104/TVA_TEM_000104_கூடலழகர்-பெருமாள்-கோயில்_கருவறை-விமானம்-இரண்டாம்தளம்-0008.jpg