திரு.வி.க. என்று அழைக்கப்படும் வி. கலியாணசுந்தரம், தமிழறிஞர்களுள் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரர். தொழிற்சங்க செயல்பாட்டாளர், சைவ சமய சொற்பொழிவாளர், எழுத்தாளர்.
சென்னைக்கு அருகே அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியை தூர் வாருவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற திருவாரூரைச் சேர்ந்த விருத்தாசலனார், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த துள்ளம் (தண்டலம்) கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவருக்கும் சின்னம்மாளுக.... மேலும் பார்க்க
திரு.வி.க. என்று அழைக்கப்படும் வி. கலியாணசுந்தரம், தமிழறிஞர்களுள் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரர். தொழிற்சங்க செயல்பாட்டாளர், சைவ சமய சொற்பொழிவாளர், எழுத்தாளர்.
சென்னைக்கு அருகே அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியை தூர் வாருவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற திருவாரூரைச் சேர்ந்த விருத்தாசலனார், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த துள்ளம் (தண்டலம்) கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது மகனாகப் பிறந்தவர் திரு.வி.க.
ஆரம்பத்தில் தனது தந்தையிடமே கல்வி பயின்ற திரு.வி.க., பின்னர், அவரது குடும்பம் பிள்ளைகளின் கல்விக்காக 1890 ஆம் ஆண்டு, சென்னை, ராயப்பேட்டைக்கு குடிபெயர்ந்ததால், அங்குள்ள ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் 1894-ல் வெஸ்லி பள்ளியில் சேர்ந்துப் படித்தார். திடீர் உடல் நலக்குறைவால் அவருக்கு வலது கையும், காலும் செயல்படாமல் போனதால் இடையில் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று.
அவருக்கு மருத்துவம் பார்த்து உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தியவர் மருத்துவரும், தலித் சிந்தனையாளருமான அயோத்திதாச பண்டிதர். 1908-ல் உடல் நலம் தேறியவுடன் மீண்டும் வெஸ்லி பள்ளியிலேயே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
வெஸ்லி பள்ளியில் டேவிட் தேவதாஸ் என்னும் ஆசிரியரிடம் ஆங்கிலமும், தமிழாசிரியராக இருந்த நா. கதிரைவேற் பிள்ளையிடம் தமிழும் கற்றார். கதிரைவேற்பிள்ளைக்கும், வடலூர் இராமலிங்க வள்ளலார் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற அருட்பா மருட்பா விவாதம் வழக்கில் நிகழ்ந்தபோது, தன் ஆசிரியருக்காக நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்ல நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் தேர்வு எழுத முடியவில்லை. அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் நின்று போனது.
பள்ளிக்கல்வி நின்று போனாலும் தனது ஆசிரியர் கதிரைவேற்பிள்ளையிடமும், அவர் மறைவுக்குப்பின் மயிலை தணிகாசல முதலியார், இராயப்பேட்டை சிதம்பர முதலியார், மயிலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தேவப்பிரகாசம் பண்டிதர், மறைமலையடிகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆகியோரிடமும் திரு.வி.க. தமிழ்க்கல்வி கற்றார்.
’மதராஸ் டைம்ஸ்’ என்னும் ஆங்கில நாளிதழின் ஆசிரியரான கிளின்பார்லோ நடத்தி வந்த ’ஷேக்ஸ்பியர் கிளப்’ என்னும் அமைப்பில் உறுப்பினராகி ஆங்கில இலக்கியங்களையும், சச்சிதானந்தம் பிள்ளை என்பவரிடமிருந்து மேலைநாட்டு அரசியல், சமூகவியல் சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தார் திரு.வி.க.
சைவ சித்தாந்தப் பாடங்களைக் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளிடமும், மருவூர் கணேச சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி ஆகியோரிடம் சம்ஸ்கிருத நூல்களையும், பார்சுவநாத நயினார், சக்ரவர்த்தி நயினார் ஆகியோரிடம் சமண நூல்களையும் பாடம் கேட்டார். அயோத்திதாச பண்டிதர் நடத்திய சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பில் இருந்து பௌத்த தத்துவங்களையும், அப்துல் கரீம் என்னும் இஸ்லாமிய அறிஞரிடம் இஸ்லாமிய மார்க்க கருத்துக்களை பயின்றார்.
சைவ சமயத்தின்மீது நம்பிக்கை கொண்டிருந்த திரு.வி.க. 1903-ம் ஆண்டு ’பாலசுப்ரமணிய பக்தஜன சபா’ என்னும் சைவ அமைப்பை ராயப்பேட்டையில் நிறுவினார். அந்த அமைப்பின் துணையமைப்பாக ’நக்கீரர் கழகம்’ என்னும் அமைப்பை உருவாக்கி சைவ இலக்கிய பயிற்சியை அளித்தார்.
1906-ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்த திரு.வி.க. பின்னர் அவ்வேலையிலிருந்து நீங்கி, ’உமாபதி குருப்பிரகாசம் பிரஸ்’ என்னும் அச்சகத்தை தொடங்கி நடத்தினார். அதில் பெரியபுராணத்தை தனித்தனி இதழ்களாக வெளியிட்டார். அதில் இழப்பு ஏற்படவே, 1910 ஆம் ஆண்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். திரு.வி.க. அங்கே ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
டிசம்பர் 1911-ல் சைவசித்தாந்த சமாஜத்தின் ஆண்டு நிறைவு விழாவில் ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை தலைமையில் திரு.வி.க. 'சைவன் எவன்?" என்னும் தலைப்பில் தன் முதல் சமய உரையை ஆற்றினார். 1920 ஆம் ஆண்டு தூத்துக்குடி சைவ சித்தாந்த சபைக்குச் சென்றபோது அங்கே ஒருவரின் ஆசாரத்தை இன்னொருவர் இழித்துப் பேசுவதைக் கண்டு ஆசாரங்களைக் கைவிட்ட திரு.வி.க., இதை கடுமையாகக் கண்டித்தார். சைவ மதத்தின் பிறமத கண்டனப் போக்கையும் மறுத்தார்.
1912 ஆம் ஆண்டு, செப்டம்பர் 13-ம் தேதி கமலாம்பிகை அம்மையாரைத் திருமணம் செய்துக் கொண்டார். சென்னை கார்டன் உட்ரோப் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய கிருஷ்ணசாமி முதலியாரின் மகள் கமலாம்பிகை. திரு.வி.க. - கமலாம்பிகை இணையருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆண் குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே மறைந்தது. திலகவதி என்று பெயரிடப்பட்ட மகள் ஓராண்டில் மறைந்தாள். எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட கமலாம்பிகை அம்மையார் 1918 ஆம் ஆண்டு காலமானார்.
இதற்கிடையே, 1916, ஜூன் மாதம் இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது புதிதாக துவக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் கருத்துக்கள், சைவ சமயம், தமிழ்மொழி ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதாகக் கருதி, 1917-ல் மாதம் கோகலே மண்டபத்தில் திவான்பகதூர் கேசவப் பிள்ளை தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் 'திராவிடரும் காங்கிரஸும்' என்னும் தலைப்பில் திரு.வி.க. தன் முதல் உரையை ஆற்றினார்.
கேசவப் பிள்ளையைத் தலைவராகக் கொண்ட சென்னை மாகாண சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட ’தேசபக்தன்’ என்னும் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு, ஓர் ஆண்டு மட்டுமே தலைமையாசிரியராகப் பணியாற்றியபின் 1917-ல் தனது ஆசிரியப் பணியை துறந்தார் திரு.வி.க.
அரசியல் விவாதங்கள் தமிழில் நிகழ வேண்டும் என திரு.வி.க. முன்முயற்சி எடுத்தார். 1918-ல் சென்னை மாகாண சங்கம் சார்பில் நடைபெற்ற தஞ்சை-திருச்சி மாநாட்டில் அரசியலறிக்கைகள், உரைகள் தமிழில் அமைய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
1918 ஆம் ஆண்டு வெங்கடேச குணாமிர்த வர்ஷிணி சபையில் திரு.வி.க. தொழிலாளர் நடுவே ஆற்றிய உரையில் ஒரு தொழிற்சங்கம் தேவை என்னும் கருத்தை முன்வைத்து, பிரம்மஞான சபை ஊழியரும், தொழிலாளர் நடுவே பணியாற்றிக்கொண்டிருந்தவருமான பி.பி. வாடியா தலைமையில் ஏப்ரல் 27, 1918-ல் சென்னை தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். கேசவ பிள்ளையும் திரு.வி.க.வும் அதன் துணைத்தலைவர்களாகப் பணியாற்றினார்கள். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம்.
பின்னர் ஜூலை 4, 1920-ல் திரு.வி.க.-வைத் தலைவராகக் கொண்டு சென்னையில் சென்னை மாகாண மத்திய தொழிலாளர் சங்கம் உருவக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை பக்கிங்ஹாம் கர்நாடிக் மில் தொழிலாளர்கள் பதிமூன்றாயிரம் பேர் வேலைநிறுத்தம் செய்தபோது அதை வழிநடத்தினார். இருபத்தைந்து ஆண்டுக்காலம் சென்னை பக்கிங்ஹாம் கர்நாடிக் மில் ஊழியர்களின் சங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார்
திரு.வி.க. 1919 ஆம் ஆண்டு திலகரை சந்தித்தார். அதே ஆண்டு சென்னை வந்த காந்தியடிகளையும் நேரில் சந்தித்தார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகளின் உரையை தமிழாக்கம் செய்தார். 6 ஏப்ரல் 1919-ல் சென்னையில் காந்தியடிகளால் அமைக்கப்பட்ட சத்தியாகிரக சபையின் சென்னை நகரத்தில் ராயப்பேட்டை வட்டாரத்தின் பொறுப்பை ஏற்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டங்கள் நடத்தினார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார்.
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட தேசபக்தன் இதழ் நின்றபின், 1920-ல் திரு.வி.க. சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில் தொழிலாளர்கள் திரட்டித் தந்த நிதியுதவியுடன் சாது அச்சகத்தைத் தொடங்கி, ’நவசக்தி’ என்னும் வார இதழை வெளியிடலானார். சிலகாலம் நவசக்தியில் கல்கி கிருஷ்ணமூர்த்தி துணையாசிரியராகப் பணியாற்றினார். பெரியார் அளித்த நிதியுதவியால் நவசக்தி வாரம் மும்முறை இதழாகச் சிலகாலம் வெளிவந்தது. 1941-ல் நவசக்தி பொறுப்பில் இருந்து திரு.வி.க. விலகிக் கொண்டபின், துணையாசிரியராக இருந்த சக்திதாசன் சுப்ரமணியத்திடம் பொறுப்பு அளிக்கப்பட்டது.
1924 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பெரியார் ஈ.வெ. ராமசாமி தலைமையில் கூடிய தமிழ்நாட்டு காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸில் இருந்த சுயராஜ்ய கட்சி ஆதரவாளர்கள் காங்கிரஸ் சட்டசபைக்குச் செல்ல வேண்டும், ஆனால் ஆட்சி அமைக்காமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு திரு.வி.க. ஆதரவு தெரிவித்தார். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அத்தீர்மானத்தை எதிர்த்தாலும், அந்த தீர்மானம் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டது.
1925-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆதரவுடன் எஸ்.ராமநாதன் கொண்டுவந்த தீர்மானத்தை திரு.வி.க. எதிர்த்து தோற்கடித்தார். இதனால் இருவருக்கும் கருத்து மோதல் உருவாகியது. ஆனாலும் திரு.வி.க. பெரியாரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். 1925ல் ஈ.வெ.ரா பெரியார் வைக்கம் போராட்டம் நடத்த திருவிதாங்கூர் சென்று அங்கே கைதானபோது ’வைக்கம் வீரர்’ என்று ஈ.வெ.ராவை புகழ்ந்து திரு.வி.க. கட்டுரை எழுதினார். அது பெரியாரின் சிறப்புப் பெயராக நிலைத்தது. 1953ல் திரு.வி.க. மறைந்தபோது நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தை ஈ.வெ.ரா தலைமை ஏற்று நடத்தினார்.
1925 டிசம்பரில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் கான்பூர் மாநாட்டில் சட்டசபை தேர்தலில் நிற்பது என முடிவாகியது. திரு.வி.க. செங்கற்பட்டு மாவட்டத்தின் முழுப்பொறுப்பும் ஏற்று ஆறுமாத காலம் காங்கிரஸுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காங்கிரஸ் கட்சி அமைச்சரவை அமைக்க முடிவு செய்தது. இதை அறிந்து காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பை உதறினார் திரு.வி.க.
பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்ட திரு.வி.க., மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் தாசி மரபு ஒழிக்கப்படுவதற்காக எடுத்த முன்முயற்சிகளில் உதவினார். 1925-ல் அம்மையார் கூட்டிய இசைவேளாளர் மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை தாங்கினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வந்தபோது அதை ஆதரித்து கட்டுரைகள் எழுதியும், சொற்பொழிவுகள் ஆற்றியும் பிரச்சாரம் செய்தார். குழந்தை மணத் தடுப்புச் சட்டமான சாரதா சட்டத்தை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். திரு.வி.க. தன் கருத்துக்களை முன்வைத்து 'பெண்ணின் பெருமை' என்னும் நூலை எழுதினார்.
திரு.வி.க. தீண்டாமை ஒழிப்பு, சாதி கடந்த திருமணம் ஆகியவற்றுக்காக தொடர்ச்சியாக எழுதிய முன்னோடிச் சிந்தனையாளர். தலித் இயக்கத்தின் தலைவர்களான அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா ஆகியோருக்கு உற்ற நண்பராகவும் திகழ்ந்தார்.
திரு.வி.க.வின் மணிவிழா, தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முயற்சியால் ஆகஸ்ட் 23, 1943-ல் சென்னையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1944 வரை நடைபெற்றது.
1947-ம் ஆண்டு பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில் தொழிலாளர் நடத்திய போராட்டத்தை வழிநடத்திய அந்தோணிப் பிள்ளை நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து, திரு.வி.க. மீண்டும் பொறுப்பேற்று நடத்தினார். அரசு அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. திரு.வி.க. பங்கேற்ற இறுதி தொழிற்சங்கப் போராட்டம் அது.
திரு.வி.க. இறுதிக்காலத்தில் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். ஜூன் 1945-ல் அவருடைய தமையன் திரு.வி.உலகநாத முதலியார் மறைந்தபின், தான் நடத்தி வந்த சாது அச்சகத்தை தனது அண்ணியின் பெயருக்கு மாற்றியளித்தார். அதன்பின் தொடர்ச்சியாக அவருக்கு பார்வையிழப்பு உருவாகியது. பிறர் உதவியின்றி நடமாட முடியாத நிலையில் 'முதுமை உளறல்' என்னும் தலைப்பில் தன் உளநிலையை கவிதையாக எழுதினார்.
1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திரு.வி.க. ராயப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இரவு ஏழரை மணிக்கு உயிர் நீத்தார். மறுநாள் அவரது உடல் ஊர்வலமாக பெரம்பூர் கொண்டு செல்லப்பட்டு சென்னை தொழிலாளர் சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை மயிலாப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
நூலாசிரியர் படைப்புகள்
1. பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
2. யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
3. தேசபக்தாமிர்தம் (1919)
4. என் கடன் பணி செய்து கிடப்பதே (1921)
5. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
6. சைவசமய சாரம் - 1921
7. நாயன்மார் திறம் - 1922
8. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
9. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
10. தமிழ்நாட்டுச் செல்வம் (1924)
11. சைவத்தின் சமசரம் - 1925
12. முருகன் அல்லது அழகு - 1925
13. இன்பவாழ்வு - 1925
14. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
15. தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு (1928)
16. கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
17. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
18. தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
19. சைவத் திறவு - 1929
20. நினைப்பவர் மனம் - 1930
21. சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து (1930)
22. இமயமலை (அல்லது) தியானம் - 1931
23. முருகன் அருள் வேட்டல் - 1932
24. சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
25. சமரச தீபம் - 1934
26. சித்தமார்க்கம் - 1935
27. தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 (1935)
28. தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 (1935)
29. நாயன்மார் வரலாறு - 1937
30. திருமால் அருள் வேட்டல் - 1938
31. முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
32. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
33. இந்தியாவும் விடுதலையும் (1940)
34. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
35. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
36. உள்ளொளி - 1942
37. பொதுமை வேட்டல் - 1942
38. திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
39. திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2
40. ஆலமும் அமுதமும் - 1944
41. புதுமை வேட்டல் - 1945
42. கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
43. சிவனருள் வேட்டல் - 1947
44. கிறிஸ்து மொழிக்குறள் - 1948
45. பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
46. இருளில் ஒளி - 1950
47. இருமையும் ஒருமையும் - 1950
48. அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
49. பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
50. சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
51. முதுமை உளறல் - 1951
52. தமிழ்க்கலை (1953)
53. வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
54. இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)
பொதுவுடைமை கட்டுரைகள்
1. தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி
2. ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து
3. கர்னாடிக் மில் வேலைநிறுத்தம்
4. தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும்
5. இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு
6. ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும்
7. பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம்
8. வேலைநிறுத்த உரிமை - கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில்
9. மில் வட்டாரத்துக் கலகங்கள்
குறைவாக பார்க்க