அமைவிடம் | - | அத்திரம்பாக்கம் |
ஊர் | - | அத்திரம்பாக்கம் |
மாவட்டம் | - | திருவள்ளூர் |
வகை | - | கற்கருவிகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கைக்கோடரிகள், வெட்டும் கருவிகள், சுரண்டிகள், கிழிப்பான்கள் |
பண்பாட்டுக் காலம் | - | பழைய கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | 1863-1866 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் |
விளக்கம் | - | அத்திரம்பாக்கத்தில் கே.டி.பானர்ஜி, சாந்தி பப்பு போன்ற அறிஞர்கள் அகழாய்வு செய்துள்ளனர். அகழாய்வு என்பது ஒரு இடத்தை முறையாகத் தோண்டி அங்கு கிடைக்கும் தொல்பொருட்களைப் பதிவு செய்து, சேகரித்து ஆராய்வதாகும். சாந்தி பப்பு அண்மையில் செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் செய்த அகழாய்வுகளின் வழியாகக் கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) எனப்படும் ஒரு வகை உருமாறிய கல் (metamorphic rock) வகைகளை, இவர்கள் கற்கருவிகள் செய்யப்பயன்படுத்தி உள்ளனர். இக்கற்கள் கிடைக்காத இடங்களில், சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்ற கற்களையும் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் செய்த கருவி கைக்கோடரி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு அச்சூலியன் கருவி என்ற பெயரும் உண்டு. இக்கருவி வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இக் கருவிகளை அவர்கள் கூழாங்கற்களைப் பயன்படுத்தி மிக அழகாகச் செதில்களை உடைத்து எடுத்துச் செய்துள்ளனர். இவர்கள் கிளீவர் எனப்படும் வெட்டும் கருவியையும்; பிற்காலத்தில் சுரண்டிகள் மற்றும் பிற கருவிகளையும் பயன்படுத்தினர். |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | Durham University |
சுருக்கம் | - | அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்த இடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுனர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. |
குறிப்புதவிகள் | - |
|
ஒலி | - |