ம.பொ.சிவஞானம், பிறப்பு: 26.06.1906. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் சால்வன் குப்பம். தந்தை பொன்னுசாமி, தாய் சிவகாமி. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்; அதுவும் முற்றுப் பெறவில்லை. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்; சோதிட முதியவர் இவரை சிவஞானி என்றே அழைத்து வந்தார்; அதுவே பிற்காலத்தில் சிவஞானம் என்றாகி நிலைத்தது.
மனைவி இராஜேஸ்வரி; திருநாவுக்கரசு என்ற மகனும் கண்ணகி, மாதவி என்ற இரு.... மேலும் பார்க்க
ம.பொ.சிவஞானம், பிறப்பு: 26.06.1906. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் சால்வன் குப்பம். தந்தை பொன்னுசாமி, தாய் சிவகாமி. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்; அதுவும் முற்றுப் பெறவில்லை. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்; சோதிட முதியவர் இவரை சிவஞானி என்றே அழைத்து வந்தார்; அதுவே பிற்காலத்தில் சிவஞானம் என்றாகி நிலைத்தது.
மனைவி இராஜேஸ்வரி; திருநாவுக்கரசு என்ற மகனும் கண்ணகி, மாதவி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
சிறுவயதில் நெசவுத்தொழில், கட்டிடத் தொழில் எனப் பல வேலைகள் செய்தபின் 1927இல் சேலம் பி.வரதராஜுலு நாயுடு சென்னையிலிருந்து நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் அச்சுக்கோப்பாளராகப் பணியாற்றினார்.
காங்கிரஸில் இணைந்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, 700 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தார். சிறைவாசத்தை இலக்கியம் படிக்கும் கூடமாக மாற்றிக்கொண்டார். 1946, நவம்பர் 21இல் தமிழரசுக் கழகம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்.
1939ஆம் ஆண்டு, சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வ.உ.சிதம்பரனாருக்குச் சிலைவைக்க முயன்றார். தமிழ்நாடு காங்கிரஸ் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பணம் படைத்தோரின் உதவியை நாடினார். அம்முயற்சியும் தோல்வியுற்றதென்றாலும் மனம் தளராமல், ஹாமில்டன் வாராவதியருகே கட்டைத்தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கையேந்திப் பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடு சிலை வைத்தார். வ.உ.சியின் பெருமைகளை, அவர் செய்த தியாகங்களை உலகறியச் செய்தார். அவருடைய வரலாற்றை ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் நூலாகவே அச்சுக்கோத்தே வெளியிட்டார். இந்நூலைத் தழுவியே, பின்னாளில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதன் திரையாக்கத்திலும் ம.பொ.சி பங்களித்துள்ளார்.
சிறையில் இருந்தபோது சிலப்பதிகாரம் கற்று, அதன்மீது மிகுந்த நேசம் கொண்டார். சிலப்பதிகாரத்தைத் தமிழகத்தில் பரப்பியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. கண்ணகி வழிபாடு, சிலப்பதிகார ஆய்வுரை போன்ற பல நூல்களை எழுதிய இவருடைய புலமை, சிலப்பதிகாரத்தின்மீது இவர் கொண்டிருந்த ஆளுமை காரணமாக, தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை, இவருக்கு சிலம்புச்செல்வர் என்ற பட்டத்தைச் சூட்டினார். அதுபோலவே வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் ஆகியோரையும் உலகறியச் செய்தார். இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விளக்கி, ம.பொ.சி எழுதிய நூல்களின் அடிப்படையில் திரைப்படங்களும் வெளிவந்தன. தமிழரசுக் கழகத்தின் மூலம் 1950இல் முதன்முதலாகச் சிலப்பதிகார மாநாட்டை ஒருங்கிணைத்ததுடன் ஆண்டுதோறும் சிலப்பதிகார விழாவை நடத்தவும் வழிவகை செய்தார்.
தமிழ் முரசு (1945), தமிழன் குரல், செங்கோல் ஆகிய இதழ்களை நடத்தி அதன் மூலம் அரசியல் எழுச்சியை உருவாக்கியதுடன் இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்தெடுத்தார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் நடத்திய தமிழ் முரசு இதழ் மூலம் ‘புதிய தமிழகம்’ என்னும் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்தார்.
1946இலேயே, ‘தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகவும் கொண்டுவாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர். தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள், தமிழ்நாடாகக் கொள்ளப்படும்’ என்றும் தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறித் தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர் ம.பொ.சி.
மிகச் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட ம.பொ.சி.யின் பல நூல்கள் அவருடைய பேச்சுகளைத் தொகுத்து எழுதப்பட்டவை. பாரதி பற்றி ம.பொ.சி. பேருரை, பாரதியாரின் பாதையிலே, எனது போராட்டம், விடுதலைப் போரில் தமிழகம், கப்பலோட்டிய தமிழன், கலிங்கத்துப் பரணி ஆய்வுரை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், சோவியத் யூனியன், இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று உரையாற்றியுள்ளார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது அதனை எதிர்த்துப் போராடித் ‘தலையைக் கொடுத்தேனும் தமிழகத்தைக் காப்போம்’ என்று முழங்கி, தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார். அதில் வெற்றி கிடைக்கவில்லை. தேவிகுளம், பீருமேடு பகுதிகளையும் இழந்தோம். ஆனால், திருத்தணியும் கன்னியாகுமரியும் செங்கோட்டையும் கிடைத்தது. தலைநகர் சென்னையையும் மீட்டுக் கொடுத்தார். 1956ஆம் ஆண்டில் தமிழர்களுக்கெனத் தமிழ்நாடு எனும் தனி மாநிலம் படைத்ததால் தமிழ் மாநிலச் சிற்பி எனப் போற்றப்படுகின்றார். மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றியதில் இவருக்கு முக்கியமான பங்குண்டு.
சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. மதுரைப் பல்கலைக்கழகம் இவருக்குப் பேரவைச் செம்மல் விருது வழங்கியது. நடுவணரசின் பத்மஸ்ரீ விருது (1972) பெற்றவர். சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேனாகவும் கல்விக்குழுத் தலைவராகவும் நூலகக்குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ம.பொ.சி., தமிழக மேலவையில் சுமார் 9 ஆண்டுக் காலம் தலைவராக இருந்தார். அதற்கு முன்பாக துணைத் தலைவராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். 1952 முதல் 1954 வரை மேலவையின் உறுப்பினராகவும், துணைக் கொறடாவாகவும் ம.பொ.சி. இருந்தார்.
1965இல் கோலாலம்பூரிலும் 1970இல் பாரிஸிலும் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டுகளில் தமிழக அரசின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1966இல் இவருடைய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1980இல் இவர் எழுதிய தன்வரலாற்று நூலான எனது போராட்டம் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.
தம் 89ஆம் வயதில் 03.10.1995இல் உடல்நலக் குறைவால் காலமானார். இவருடைய விடுதலைப் போரில் தமிழகம் நூலைத் தமிழக அரசு, 1985இல் நாட்டுடைமையாக்கியது. பின்னர், 2006இல் ம.பொ.சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழக அரசு, இவருடைய அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கியது. 15.08.2006இல் நடுவணரசு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. தமிழகத்தின் எல்லையைக் காத்ததற்காக, தமிழக அரசால் இவருக்குத் திருத்தணியில் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் சென்னை தியாகராய நகரிலும் 2011இல் தமிழக அரசால் இவருக்குச் சிலை அமைக்கப்பட்டது.
படைப்புகள்
பாரதியைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்
· வள்ளலாரும் பாரதியும் [1965]
· எங்கள் கவி பாரதி [1953]
· பாரதியாரும் ஆங்கிலமும் [1961]
· பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962]
· உலக மகாகவி பாரதி [1966]
· பாரதியார் பாதையிலே [1974]
· பாரதியின் போர்க்குரல் [1979]
· பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை [1983]
· என்னை வளர்த்த பாரதி [2013]
சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள்
· சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
· கண்ணகி வழிபாடு [1950]
· இளங்கோவின் சிலம்பு [1953]
· வீரக்கண்ணகி [1958]
· நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
· மாதவியின் மாண்பு [1968]
· கோவலன் குற்றவாளியா? [1971]
· சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
· சிலப்பதிகார யாத்திரை [1977]
· சிலப்பதிகார ஆய்வுரை [1979]
· சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
· சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
· சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]
சிதம்பரனார் பற்றிய நூல்கள்
· கப்பலோட்டிய தமிழன் [1944]
· தளபதி சிதம்பரனார் [1950]
· கப்பலோட்டிய சிதம்பரனார் [1972]
கட்டபொம்மன் பற்றிய நூல்கள்
· வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
· கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
· சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]
திருவள்ளுவர் பற்றிய நூல்கள்
· வள்ளுவர் வகுத்த வழி [1952]
· திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
· திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974]
இராமலிங்க அடிகள் பற்றிய நூல்கள்
· வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963] - சாகித்திய அகாதெமி விருது
· வள்ளலாரும் பாரதியும் [1965]
· வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
· வள்ளலார் வகுத்த வழி [1970]
· வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
· வானொலியில் வள்ளலார் [1976]
· வள்ளலாரும் காந்தியடிகளும் [1977]
ஆங்கில நூல்கள்
· The Great Patriot V.O. Chidambaram Pillai
· The First Patriot Veera Pandia Katta Bomman
· The Universal Vision of Saint Ramalinga
குறைவாக பார்க்க