tva-logo

தஞ்சாவூர் அரண்மனை

அமைவிடம் - தஞ்சாவூர்
ஊர் - தஞ்சாவூர்
வட்டம் - தஞ்சாவூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
வகை - அரண்மனை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.15-ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - தஞ்சை பெருவுடையார் கோயில், சரசுவதி மகால் நூலகம், இராசராசன் மணிமண்டபம்
பாதுகாக்கும் நிறுவனம் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
விளக்கம் - அரண்மனையின் வளாகம் மொத்தம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது.இந்த அரண்மனை நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன. மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன.ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுத சேமிப்பு மாளிகை கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை. நீதிமன்ற கட்டடம் - இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது.இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும் தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன.
ஒளிப்படம் எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் - தஞ்சை அரண்மனை இது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை கி.பி. 1674 இல் இருந்து1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.