தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம்
( நவ. 6, 2018 – திச. 26, 2018 )

சித்தமருத்துவ மாமணி
தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை
(19.9.1880 – 12.11.1953 )

சித்தமருத்துவப் பேரறிஞரான டி.வி.சாம்பவசிவம் பிள்ளை என்று அழைக்கப்பட்ட தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை அவர்கள் சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். தமிழிசைக்கு ஆப்ரகாம் பண்டிதர் வாய்த்ததுபோல, தமிழ்மருத்துவமாகிய சித்த மருத்துவத்துக்கு வாராது வந்த மாமணி சாம்பசிவனார்.

இவர் எழுதிய Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Based on Indian Medical Science என்னும் பெருநூல் சித்தமருத்துவத் துறைக்குக் கிடைத்த கலைக்களஞ்சியமாகும். ஐந்து தொகுதிகளையும், 6537 பக்கங்களையும் கொண்ட இந்நூலே தமிழ் மருத்துவத்தை உலகறிய செய்தது. 1916ஆம் ஆண்டுமுதல் இந்நூலுக்காக உழைத்து நூலின் முதல் மூன்று தொகுதிகளை 1931இல் வெளியிட்டார். இம்மூன்று தொகுதிகள் வெளிவந்தவுடன் இவைகளின் காப்புரிமைக்காக பிரிட்டிசு கவுன்சிலும் செர்மன் தூதரகமும் போட்டியிட்டன. பெருந்தொகையைக் கொடுக்க முன்வந்தும் சாம்பசிவனார் அயல்நாட்டினருக்குக் காப்புரிமையைத் தரமறுத்துவிட்டார்.

அடுத்த இருபதாண்டுகள் கடுமையாக உழைத்து நான்கு, ஐந்தாம் தொகுதிகளுக்குரியவற்றை எழுதிமுடித்தபின் 1953ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றும், தன் ஓய்வூதியம் மூலமும் இப்பணியை இவர் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறந்தபின் இவரது உடைமைகள் அனைத்தும் அரசுடமையாயின. 1953ஆம் ஆண்டிலிருந்து இவர் சேகரித்து வைத்திருந்த நூல்களும் சுவடிகளும் கையெழுத்துப்பிரதியாக இருந்த களஞ்சியத்தின் நான்கு, ஐந்தாம் தொகுதிகளும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்தன. 1966ஆம் ஆண்டு முதல் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இயக்குநரான தாமரை சுப்பையா பிள்ளை அவர்கள் சாம்பசிவனாரின் சேகரிப்புகளைக் காப்பாற்ற தொடர்ந்து முயன்றார். பல்லாண்டுகளுக்குப் பின் சாம்பசிவனாரின் உடைமைகள் அறிஞர் அண்ணா சித்தமருத்துவ இயக்குநரகத்துக்கு மாற்றப்பட்டன. இறுதியில் 1977ஆம் ஆண்டு நான்காம் தொகுதியும், 1978ஆம் ஆண்டு ஐந்தாம் தொகுதியும் ஜி.டி.நாயுடு அறநிலை மூலம் வெளியிடப்பட்டன. தாமரை சுப்பையா பிள்ளையும், ஜிடி நாயுடுவும் முயலாவிட்டால் எஞ்சிய தொகுதிகள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை. தமிழன்னை சூடியுள்ள மாலையிலிருந்து இவையும் உதிர்ந்த மலர்களாகியிருக்கும்.

பழங்கால அச்சுத்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வெளிவந்த முதல் மூன்று தொகுதிகளும் கவினுற வடிவமைக்கப்பட்டு அழகியல்தன்மையோடு வெளிவந்தன. இன்றும் அத்தொகுதிகளின் அச்சமைப்பு காண்போரைச் சொக்கவைக்கும். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் இந்நூலின் தொகுதிகளை பலநிறுவனங்கள் வெளியிட்டிருந்தாலும் 1931இல் வெளிடப்பட்ட தொகுதிகளின் அழகியல்தன்மை இக்காலப் பதிப்புகளில் அறவே இல்லை.

டி.வி. சாம்பசிவம் பிள்ளை எழுதிய நூலை மட்டுமின்றி சித்தமருத்துவம் தொடர்பான அனைத்து நூல்களையும் காண இங்கே சொடுக்கவும்